Untitled Document
May 2, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இந்திய இராணுவத்தின் வாதரவத்தை படுகொலை! Top News
[Wednesday 2023-06-07 06:00]

எங்களின் மண்ணில் அநியாயமாக கொல்லப்பட்ட எம் உறவுகளின் நினைவுத்தூபிகள் எம்மக்களின் கண்முன்னே இடித்து அழிக்கப்படுகின்றன. ஆனால், அமைதிப்படை என்கிற பெயரில் ஈழத்தில் காலடி எடுத்து வைத்து எம் மக்களை அன்று உயிருடன் கொழுத்திய இந்தியப் படைக்கு, அதன் அதிகாரிக்கு யாழில் நினைவுத்தூபியை பராமரித்து நினைவு கூர்வதில் இந்தியா அதிக அக்கறை செலுத்துகிறது. இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடாத்திய காட்டுமிராண்டித்தனங்களை தொடர்ந்தும் நினைவு படுத்துவது அனைவரதும் கடமையாகும்.

இந்திய இராணுவத்தின் வாதரவத்தை படுகொலை இடம்பெற்று 34 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது , இருந்தும் அவர்களுக்கான நீதி என்பது மறுக்கப்பட்ட ஒன்றாகவே இன்றும் இருக்கின்றது. அன்று, 1989 ஆம் ஆண்டு 06ஆம் மாதம் 5 ஆம் திகதி விடிந்தும் விடியாத விடிகாலை பொழுது, நடக்கப்போவதை ஏதுமே அறியாத அந்த இரு கிராமங்களும் மெல்ல மெல்ல துயிலெழுந்தன.

யாழ்ப்பாணம் - வாதரவத்தை – நான்கு பக்கமும் உப்புநீரால் சூழப்பட்ட ஒரு சிறியதரைத்தோற்ற அமைப்பை கொண்ட நிலப்பரப்பு. அன்றாட வாழ்க்கையை இக்கிராமமக்கள் கூலி வேலையையும், விவசாயத்தையுமே நம்பி வாழும் சூழல், ஆனாலும் மழை வீழ்ச்சி தொடர்ந்தும் கிடைக்காத காரணத்தினால் முழுதாக விவசாயத்தை நம்பியும் வாழ்ந்துவிட முடியாது.

இதனால் கூலி வேலை என்றாலும், விவசாயம் என்றாலும் அயல் கிராமங்களையே இன்றும் இம்மக்கள் நம்பி வாழ்ந்து வருகின்றனர். "ஒன்பது பேரை இந்தியன் ஆமி பிடித்து அயல் கிராமமான புத்தூர் தகரம் பிள்ளையார் கோவிலடியில் சுட்டுப்போட்டு எரித்து விட்டார்களாம்" என வெளிப்பிரதேசங்களில் இருந்து ஊருக்குள் வருபவர்களால் ஜாடைமாடையாக கசிய விடப்பட்ட செய்தி, ஊர் மக்களையே பதைபதைப்பில் ஆழ்த்தியது.

வாதரவத்தை பகுதி மக்கள் வழமையாக வாதரவத்தை -தகரம்பிள்ளையார் வீதி - புத்தூர் ஊடாக பயணம் செய்வது வழமையாகும். தங்கள் பிள்ளைகள் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் நேரத்தை ஒவ்வொரு தாய்மாரும் மனக்கண்ணில் எண்ணி பதைபதைத்துக் கொண்டனர்

கோரமாக சுடப்பட்டு இறந்தவர்களை காண ஊரே திரண்டது. என்மகனா என்று கேட்கும் தாயும், என் கணவனா என்று கேட்கும் துணைவியர்களும் கதறியழுது அவ்விடத்தை நிரப்பி தம் ஒவ்வொரு உறவுகளையும் கொளுத்திய சாம்பலுக்குள் தேடத்தொடங்கினர்.

இந்திய இராணுவத்தின் படுகொலைத் தாக்குதலுக்கு தம்பிராசா- லட்சணகுமார், தளையசிங்கம்- தயானந்தராசா, சுந்தரராசா- வைகுந்தராசா, வல்லிபுரம்- துரைராஜசிங்கம், வல்லிபுரம்- பாலசிங்கம், தம்பிமுத்து - யோகேந்திரம், ஆகிய வாதரவத்தையை சேர்ந்தவர்களும், சம்பவ இடத்தில் தோட்டவேலை செய்து கொண்டிருந்த புத்தூர் கிழக்கு புத்தூர் பகுதியை சேர்ந்த தவசி- நல்லதம்பி (நல்லான்), சின்னவன் - சிவபாதம், சடையன் கந்தையா ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டனர்.

இறந்து கிடப்பவர்கள் மத்தியில் உறவுகளை தேடுபவர்களுக்கு எரியூட்டப்பட்ட, அரைகுறை எரிந்த உடற்கட்டைகள் தான் மிச்சம் கிடைத்தன.

இந்திய ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் பற்றி விபரிக்கிறார் இறந்தவர்களில் ஒருவரான சின்னவனின் மனைவி வசந்தலீலா,

“தம்பி நாங்கள் அதுல தோட்டம் தான் செய்யிறனாங்கள், எங்கட வீடுகளும் பக்கத்தில தான் இருக்கு. அதுல நாலைந்து வீடுகள் இருந்துச்சு எங்கட நிலையான கல்வீடு.

விடியப்பறம் வந்துட்டாங்கள். என்ர மனுசனையும், மாமாவையும் அவற்ற பெரியப்பாவையும் கூட்டிக்கொண்டு அங்கால போனவங்கள், பொம்பளையள் எங்களை எல்லாம் தகரம்பிள்ளையார் கோவிலுக்க கூட்டிக்கொண்டு போய் விட்டிட்டாங்கள்.

அதே நேரத்தில வாதரவத்தையால வந்த ஆறு பேரையும் பிடிச்சு எங்கட மனுசன் இருந்த இடத்துக்கு கூட்டி போனவங்கள். அதுகளும் மணல் ஏத்தப் போற பிள்ளைகள் எல்லாரையும் சுட்டு சத்தம் கேட்டுது. கொஞ்ச நேரத்துல அவங்கள் வாதரவத்தை பக்கம் போட்டாங்கள். நாங்கள் வெளில வந்து பார்த்தால் எரிச்சுகுறையளாக விட்டுப்போயிருக்கிறாங்கள், அதுக்குள்ள என்ர மனுசனும் இருந்தவர், ஒருத்தரையும் அடையாளம் காண ஏலாம இருந்துச்சு.

நான் தம்பி எண்பத்திரண்டாம் ஆண்டு கலியாணம் கட்டினான். சம்பவம் நடக்கும் போது எனக்கு மூன்று பிள்ளைகள். இருக்கிற வீட்டைக்கூட வேற சொந்தக்காரர் தான் பரிதாபம் பார்த்து தந்தவை.” இவ்வாறு கூறி முடித்ததும் அவரின் கண்களில் கண்ணீர் முட்டியது . நா தழுதழுக்க அந்த தாயின் வாயிலிருந்து வேறெந்த வார்த்தைககளும் வெளிவரவில்லை.

“யாராச்சும் வந்து கேட்பாங்கள் தம்பி இது யார்கட்டின தூபி என்று. இறந்தவங்களோட நினைவாக இயக்கம் தான் தம்பி அதுல தூபி கட்டினது, உடனையே நான் சொல்லிப்போடுவன் எங்களுக்கு தெரியா என்று. உதுகளால தம்பி கரைச்சல். இருக்கிற பிள்ளைகளையாச்சும் காப்பாத்திட்டேன் என்ற பெருமையோட இனி சாவேன் மோனை.” ஏக்கப் பெருமூச்சுடன் எழுந்து சென்றார் அந்த தாய்.

சுட்டு எரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அந்த வீதியில் இரண்டு வருடங்களுக்கு மேலாக இரத்தக்கறைகளை காணக்கூடியதாக இருந்ததாக பிரதேச வாசிகள் நினைவுகூர்ந்தனர்.

குறித்த சம்பவத்தில் கணவனை இழந்த யோகேந்திரம் பத்மாவதி கருத்து தெரிவிக்கையில்,

“எனக்கு தம்பி ஒண்டும் தெரியாது. வழமையா வெளிக்கிட்டு போற போல தான் தம்பி போச்சுதுகள். விடியப்பறம் ஒரு ஐந்து மணி ஐந்தரை இருக்கும். வெடிச்சத்தங்கள் கேட்டுது. நாங்கள் நினைச்சுக்கூட பார்க்கலை எங்கட மனுசனும் அதுக்குள்ளே தான், எங்கட சனங்கள் எல்லாம் போச்சுதுகள் அதுகளோட போய்த் தான் தம்பி தெரியும் அகப்பட்டது என்ர மனுசனும் என்று. பிறகு தம்பி நாங்கள் வாதரவத்தைல இருந்து அக்காச்சி எழுச்சி கிராமத்துக்கு வந்துட்டம். பிறகு இயக்கம் தான் புது வீடு கட்டி தந்தது. இப்பவும் தம்பி நடந்த சம்பவங்களை நினைக்க உடல் தானாக நடுங்குது.” இவ்வாறு கூறியவாறு கண்களை மறுபுறம் திருப்பி துடைத்துக்கொண்டார்.

புத்தூர் அருகே "கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பு" எனும் கிராமம். விடுதலைப் புலிகளால் தத்தெடுக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு மாதிரி "கம்யூன்". இந்த கிராம மக்கள் இன்னும் தங்கள் கிராமத்தின் பெயரை "கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பு" என பெருமையாக சொல்கிறார்கள். விடுதலைப்புலிகளின் வீட்டுத் திட்டத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட அந்த வீடுகள் மட்டுமே இன்னும் அவர்களின் பாதுகாப்பு அரண்களாக அசையாமல் உறுதியோடு நிற்கின்றன.

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரைக் கேட்டாலும் கப்டன் அக்காச்சி பற்றி "சீவலப்பேரி பாண்டி" கதை சொல்வது போல் கதை கதையாக சொல்கிறார்கள். கப்டன் அக்காச்சி அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உண்டு, உறங்கி, தோட்டங்களிலும் வயல்களிலும் மக்களோடு மக்களாக உழுது, உழைத்து அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து வாழ்ந்திருக்கிறான் என்பதை அந்த மக்கள் சொல்லும் கதைகளிலிருந்து உணரலாம்.

அங்கு 60 வயது நிரம்பிய ஒரு தாயொருவர் கூறுகையில், 1989 ஆம் ஆண்டு. ஆனி மாதம் 5ஆம் திகதி காலையில் தன் கணவனையும் அண்ணனையும் அண்ணனின் மகனையும் ஒரு மருமகனையும் சீமெந்து தொழிற்சாலைக்கு வேலைக்கு அனுப்பி போட்டு பிள்ளைகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்த நேரம், அக்கம் பக்கமெல்லாம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. வாதரவத்தை, "தகரம் பிள்ளையார் கோவிலடியில் இந்தியன் ஆமி ஆரையோ சுட்டுக் கொண்டு போட்டாங்களாம்."

"ஆரோ எவரோ பாவங்கள்" என பரிதாபப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அறிகிறார் அந்த தாய்... அது யாருமில்லை அவரின் கணவனும் கணவனோடு போன அண்ணனும் அண்ணனின் மகனும் மருமகனும் அவர்களோடு இன்னும் 5 பேர். எல்லாரும் அரைகுறை எரிஞ்ச நிலையில் தான், கண் கொடுத்து பார்க்கேலாம இருந்தது. என்றார்.

இதேவேளை இந்திய அரசால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் நினைவாக தமிழீழ விடுதலைப்புலிகளால் நினைவு தூபி ஒன்று சம்பவம் இடம்பெற்ற தகரம்பிள்ளையார் கோவிலடியில்; தொண்ணூறாம் ஆண்டளவில் நிறுவப்பட்டிருந்தது. இறுதிப்போர் நிறைவடைந்ததன் பிற்பாடு இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் அந்த நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டது.

என்ன ஒரு ஒற்றுமை! கடல் கடந்து வந்தவர்கள் ஆட்களைக் கொன்றார்கள். தேசம் விட்டு தேசம் வந்தவர்கள் தூபியை உடைத்தார்கள்.

கொல்லப்பட்ட எம் மக்களின் நினைவுத் தூபிகளும் விதைகளாகிப் போன எம் மாவீரர்களின் உறங்கும் இல்லங்களெல்லாம் அழிக்கப்பட... கொலை செய்தவர்களுக்கு எம் கண் முன்னால் தூபிகள் எழுப்பப்பட்டு கொண்டிருக்கின்றன.

கண்ணீரால் அல்ல செந்நீரால் எழுதிய வரலாற்றை சூழ்ச்சியால் மாற்றி எழுதிட விடுதலும் முறையோ?

ஜெகதீஸ்வரன் டிஷாந்த் (வாதவூரான்)

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா