Untitled Document
November 19, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
யாழ்ப்பாணம் எதிர்கொண்டிருப்பது ஒரு ஆழமான ஒழுக்க மற்றும் பண்பாட்டு வீழ்ச்சி!
[Thursday 2026-11-19 07:00]

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் எந்தவொரு கிராமத்து ஒழுங்கைக்குள் நுழைந்தாலும், அங்கே வீடுகளின் வேலிகள் உயரமாக இருந்ததில்லை; மனங்களின் கதவுகளும் எப்போதும் திறந்தே இருந்தன. ஒரு வீட்டில் சமைக்கப்படும் கறியின் வாசம் பக்கத்து வீட்டுப் பசியையும் ஆற்றிய காலம் அது. உறவுமுறை என்பது வெறும் இரத்த பந்தமாக மட்டுமல்லாமல், ஒரு சமூகப் பாதுகாப்பு அரணாகவும், அன்பின் ஊற்றாகவும் திகழ்ந்தது. ஆனால், இன்று யாழ்ப்பாணத்துச் சமூகத்தின் அத்திவாரமே ஆட்டம் கண்டுள்ளது. அன்று இருந்த பாசப்பிணைப்பும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இன்று அடியோடு காணாமல் போய், பணத்தையும் போலி கௌரவத்தையும் மட்டுமே அளவுகோலாகக் கொண்ட ஒரு சுயநலச் சமூகமாக யாழ்ப்பாணம் உருமாறி நிற்கிறது.

இன்றைய யாழ்ப்பாணத்துச் சமூகத்தில் ஒரு மனிதனின் மதிப்பு அவனது குணத்தாலோ, கல்வியாலோ அல்லது நேர்மையாலோ தீர்மானிக்கப்படுவதில்லை; மாறாக, அவனது வங்கிக் கணக்கிலும், வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தின் அளவிலும், அவன் கட்டியிருக்கும் மாடி வீட்டின் உயரத்திலுமே தங்கியிருக்கிறது.

உறவினர்களில் எவரேனும் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தால், அவர்களை ஏறெடுத்தும் பார்க்காத மனநிலை மேலோங்கியுள்ளது. அதேவேளை, வெளிநாட்டிலிருந்து வரும் பணக்கார உறவினர்களுடனும், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களுடனும் மட்டுமே நெருங்கிப் பழகுவதை ஒரு கௌரவமாகக் கருதும் போக்கு அதிகரித்துள்ளது.

ஒரு காலத்தில் ஊரே கூடி, உறவுகள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடிய திருமண நிகழ்வுகள், இன்று தகுதிப் பிரிவினைகளைக் காட்டும் மேடைகளாக மாறிவிட்டன. தனக்குப் பிடிக்காத உறவுகளையும், பொருளாதாரத்தில் குறைந்தவர்களையும் திருமணங்களுக்கு அழைக்காமல் புறக்கணிப்பதன் மூலம், தமது ஆணவத்தையும் பழிவாங்கும் உணர்வையும் வெளிப்படுத்தும் ஒரு கீழ்த்தரமான கலாச்சாரம் உருவாகியுள்ளது.

இன்றைய யாழ்ப்பாணத்துச் சமூகத்தை ஆட்டிப்படைக்கும் மிகக் கொடிய வியாதி, "தங்களை விட யாரும் முன்னேறிவிடக் கூடாது" என்ற நச்சு மனநிலைதான். ஒரு கூடையில் இருக்கும் நண்டுகளில் ஒன்று மேலே ஏற முயன்றால், மற்ற நண்டுகள் அதன் காலைப் பிடித்துக் கீழே இழுத்து வீழ்த்துவதைப் போல, அடுத்தவரின் வளர்ச்சியைத் தடுப்பதிலேயே இந்தச் சமூகம் குறியாக இருக்கிறது.

முன்னேறுவது பக்கத்து வீட்டுக்காரனாக இருந்தாலும் சரி, ஒரே தாயின் வயிற்றில் பிறந்த உடன்பிறந்த சகோதரனாக இருந்தாலும் சரி, அவர்களின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத பொறாமை தீயாகப் பரவியுள்ளது. அவர்களுக்கு எதிராக வதந்திகளைப் பரப்புவது, சூழ்ச்சிகள் செய்வது, தொழில் அல்லது கல்வி வாய்ப்புகளைத் தடுப்பது எனப் பல வழிகளிலும் அவர்களைக் கீழே இழுத்து வீழ்த்திய பின்னரே நிம்மதிப் பெருமூச்சு விடும் அளவிற்கு மனங்கள் வக்கிரமடைந்துள்ளன.

சகோதரர்களின் பிள்ளைகள் நன்றாகப் படித்து உயர்ந்த நிலைக்குச் சென்றாலோ அல்லது சொந்த முயற்சியில் முன்னேறினாலோ அதை மனதாரப் பாராட்டும் பக்குவம் அற்றுப்போய்விட்டது. பெற்றோர் தேடி வைத்த ஒரு துண்டு நிலத்திற்காகவும், பூர்வீக வீட்டிற்காகவும் நீதிமன்றப் படிகளில் ஏறி நின்று, பணத்திற்காக இரத்த பந்தங்களை அறுத்தெறியும் மனநிலை சாதாரண ஒன்றாகிவிட்டது. யாழ்ப்பாணத்துச் சமூகத்தின் இந்தப் பண்பாட்டுச் சிதைவுக்கு மிக முக்கியக் காரணம், உழைப்பில்லாமல் வந்து குவியும் வெளிநாட்டுப் பணம் என்பதை மறுக்க முடியாது.

புலம்பெயர் நாடுகளில் இரவு பகலாக உழைத்து உறவுகள் அனுப்பும் பணம், யாழ்ப்பாணத்தில் ஒரு உற்பத்தியற்ற, சோம்பேறித்தனமான தலைமுறையை உருவாக்கியுள்ளது. சொந்த மண்ணில் விவசாயம் செய்யவோ, சுயதொழில் தொடங்கவோ விரும்பாமல், வெளிநாட்டுப் பணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு 'ஒட்டுண்ணி' மனநிலை இளைஞர்கள் மத்தியில் வேரூன்றியுள்ளது. உழைத்துச் சம்பாதிக்கும் பணத்திற்கு மட்டுமே அதன் அருமை தெரியும். இலவசமாகக் கிடைக்கும் பணம் ஆணவத்தையும், ஆடம்பர மோகத்தையும், அடுத்தவரை மதிக்காத திமிரையுமே வளர்க்கிறது.

இன்று யாழ்ப்பாணத்தில் பெருகி வரும் ஆடம்பர வாகனங்களும், நட்சத்திர விடுதிகளும் இந்த உழைப்பில்லாத பணத்தின் வெளிப்பாடுகள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. எங்கு பார்த்தாலும் சுயநலமே விளைந்து போய்க் கிடக்கின்றது. யாழ்ப்பாணத்துச் சமூகத்தின் சுயநலம் என்பது இன்று நேற்றுத் தொடங்கியதல்ல; அதன் மிகக் கொடூரமான முகத்தை 2009-ஆம் ஆண்டு வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த இறுதிப் போரின் போதே வரலாறு பதிவு செய்துவிட்டது.

ஒரு இனமே வன்னி மண்ணில் கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டு, உணவின்றி, மருந்தின்றி, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மரண ஓலமிட்ட போது, யாழ்ப்பாணத்துச் சமூகம் தமக்கும் அந்தப் போருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாதது போலத் தனது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தது. தமது சொந்த சகோதரர்கள் இரத்த வெள்ளத்தில் மிதந்தபோது, “சாகிறது வன்னிக் காட்டான் தானே “ என தமது சுயநலத்தையும் பாதுகாப்பையும் மட்டுமே முன்னிறுத்தி மௌனம் காத்த ஒரு சமூகமாகவே யாழ்ப்பாணம் வரலாற்றில் அழியாத பதிவாகிள்ளது.

எத்தனையோ ஆயிரம் இளைஞர்கள் தமது இளமையையும் உயிரையும் இந்த மண்ணின் விடியலுக்காகத் தியாகம் செய்தார்கள். ஆனால், போர் முடிந்த கையோடு அந்தத் தியாகங்களையும், போராட்டத்தின் வலிகளையும் அடியோடு மறந்து, சுயநல வாழ்க்கைக்குள் மூழ்கிப்போன சமூகமாக யாழ்ப்பாணம் மாறிவிட்டது.

மாவீரர்களின் குடும்பங்களும், போரால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளும் இன்று வறுமையிலும் தனிமையிலும் வாடிக்கொண்டிருக்க, அவர்களுக்கு சமூகம் தனது சுயநலப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்று யாழ்ப்பாணம் எதிர்கொண்டிருப்பது வெறும் பொருளாதார மாற்றமோ அல்லது நவீனமயமாக்கலோ அல்ல; அது ஒரு ஆழமான ஒழுக்க மற்றும் பண்பாட்டு வீழ்ச்சி.

பணம் மனிதர்களுக்கு வசதிகளைத் தரலாம், ஆனால் மனிதநேயத்தைத் தராது. இரத்த பந்தங்களை விடப் பணமும், அயலவரின் வளர்ச்சியை விடப் பொறாமையும், வரலாற்று வலிகளை விடச் சுயநலமும் பெரிதெனக் கருதும் ஒரு சமூகம், வெளியிலிருந்து எந்த எதிரியும் இல்லாமலேயே தன்னைத்தானே அழித்துக்கொள்ளும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த அந்த ஈரமான மனங்களும், விட்டுக்கொடுக்கும் உறவுகளும் மீண்டும் துளிர்க்காதவரை, யாழ்ப்பாணத்தின் கான்கிரீட் மாளிகைகள் வெறும் உணர்வற்ற கல்லறைகளாகவே காட்சியளிக்கும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா