Untitled Document
November 19, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சிவாஜிலிங்கமும்! சில உண்மைகளும்! Top News
[Tuesday 2026-11-17 20:00]

யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! பண்புருமாற்றம் என்பது போராட்டத்தை ஒரு இயக்கத்துக்கு ஊடாகப் பார்ப்பதோ அல்லது ஒரு இயக்கத்துக்கு ஊடாக நிராகரிப்பதோ அல்ல. பண்புருமாற்றம் என்பது போராட்டத்தை ஒரு கட்சிக்கூடாகப் பார்ப்பதோ அல்லது ஒரு கட்சிக்கூடாக நிராகரிப்பதோ அல்ல.மாறாக பண்புருமாற்றம் என்பது மக்களோடு நிற்பது.மக்களுடைய கூட்டுக் காயங்களை,கூட்டுத் துயரங்களை,கூட்டு அபிலாசைகளைப் பிரதிபலிப்பது. மக்களுடைய நியாயங்களுக்காக போராடுவது.

ஒரு மாத காலத்துக்குள்ளேயே மீண்டும் ஓர் இரங்கல் குறிப்பு.ஆனால் இரண்டுக்கும் ஒற்றுமை உண்டு. முதலாவதாக ஜோதிலிங்கம். இரண்டாவதாக இப்பொழுது சிவாஜிலிங்கம். இரண்டு லிங்கங்களுமே தமிழ்த் தேசிய அரசியலில் பண்புருமாற்றத்தைப் பிரதிபலித்தவர்கள்.

பண்புருமாற்றம் என்ற வார்த்தையை நான் ஜோதிலிங்கத்தின் இறுதி நிகழ்வில் பயன்படுத்திய பொழுது முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கேட்டிருந்தார்,”விடுதலைப்புலிகள் இயக்கத்தை நோக்கிச் செல்வதுதான், அல்லது அந்த அமைப்பின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதுதான் பண்புருமாற்றமா?” என்று.

இல்லை. பண்புருமாற்றம் என்பது போராட்டத்தை ஒரு இயக்கத்துக்கு ஊடாகப் பார்ப்பதோ அல்லது ஒரு இயக்கத்துக்கு ஊடாக நிராகரிப்பதோ அல்ல. பண்புருமாற்றம் என்பது போராட்டத்தை ஒரு கட்சிக்கூடாகப் பார்ப்பதோ அல்லது ஒரு கட்சிக்கூடாக நிராகரிப்பதோ அல்ல.மாறாக பண்புருமாற்றம் என்பது மக்களோடு நிற்பது.மக்களுடைய கூட்டுக் காயங்களை,கூட்டுத் துயரங்களை,கூட்டு அபிலாசைகளைப் பிரதிபலிப்பது. மக்களுடைய நியாயங்களுக்காக போராடுவது.

தம்மைத் தோற்கடித்த அல்லது அரங்கில் இருந்து அகற்றிய ஓர் இயக்கத்துக்கு எதிரான உணர்வுகள், பழிவாங்கும் உணர்வுகள் காரணமாக தமது சொந்த மக்களுக்கு எதிராகத் திரும்பாத எல்லா அரசியற் செயற்பாட்டாளர்களும் பண்புரு மாற்றத்தைப் பிரதிபலிக்கிறார்கள்.மக்களோடு நின்று ஓடுக்குமறைக்கு எதிராகப் போராடுகிறார்கள்.தாங்கள் போராட்ட அரங்கில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட பின்னரும் அந்த அரங்கில் வாழ்ந்த மக்களோடு நிற்பது என்பது ஒரு மகத்தான சமநிலை. ஒரு தவம்.

அண்மை காலங்களில் சமூக ஊடக வலைத்தளங்களில் டிஜிட்டல் இனவாதம் ஒன்றை காணக்கூடியதாக உள்ளது.தமிழ் மக்கள் தமது துக்கங்களை, நினைவுகளைப் பகிரும்போது அதற்கு எதிராக சிங்கள முகநூல் பயனர்கள் கேலிக் குறிப்புக்களையும் கிண்டல் குறிப்புக்களையும் இன வெறுப்பைக் கக்கும் குறிப்புகளையும் போடுவது ஒரு வழமையாகி வருகிறது.சிவாஜி லிங்கத்தின் நினைவுக் குறிப்புக்கு கீழேயும் அவ்வாறு சிரிப்புக் குறியீடுகள் போடப்பட்டன.

ஆனால் இதைச் சுட்டிக்காட்டும் தமிழர்கள் வேறு ஒரு விடயத்தைக் கவனிக்கத் தவறுகிறார்களோ தெரியவில்லை. அது என்னவென்றால்,முன்பு இயக்கங்களாகப் பிரிந்து நின்றவர்களில் ஒரு பகுதியினர், புதிய தொழில்நுட்பத் தளத்திலும் அதாவது சமூக ஊடக வலைத் தளங்களிலும் இப்பொழுதும் இயக்கங்களாகவே பிரிந்து நிற்கின்றார்கள் என்பதுதான்.ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற இயக்கத்துக்கு எதிராக எழுதுகிறார்கள்.அவை ஆறாத பழைய காயங்களை,தீர்க்கப்படாத பழிவாங்கும் உணர்ச்சியைப் பிரதிபலிக்கும் எழுத்துக்கள்.தமிழ்ச் சமூகம் தனக்குள்தானே பொறுப்புக்கூற வேண்டிய விடயங்கள். தனக்குள் தானே குணமாக்கிக் கொள்ள வேண்டிய காயங்கள். எல்லா இயக்கங்களுக்குமான ஒரு பொதுவான நினைவு நாளை,ஒரு பொதுவான நினைவுச் சின்னத்தை உருவாக்குவது எவ்வளவு சவால்கள் மிகுந்தது என்பதனை அந்தக் குறிப்புகள் காட்டுகின்றன.

அதாவது அந்த முகநூல் எழுத்துக்களைத் தொகுத்துப் பார்க்கும்போது கிடைக்கும் செய்தி என்னவென்றால்,ஒவ்வொருவரும் தாம் சார்ந்த இயக்கத்துக்கு ஊடாகவே போராட்டத்தைப் பார்க்கின்றார்கள்;தாம் சார்ந்த இயக்கத்துக்கு ஊடகவே போராட்டத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்;அல்லது நிராகரிக்கிறார்கள்;அல்லது நியாயப்படுத்துகிறார்கள்;அல்லது விமர்சிக்கிறார்கள்.அதாவது போராட்டத்தை இயக்கங்களுக்கு ஊடாகவே பார்க்கிறார்கள்.மக்களுக்கு ஊடாக அல்ல.

ஆனால் சிவாஜிலிங்கமும் உட்பட பண்புருமாற்றத்தை வாழ்ந்து காட்டிய அரசியற் செயற்பாட்டாளர்கள் அனைவரும் இறந்த காலத்தின் கசப்பான, அவமானகரமான,உயிராபத்து மிகுந்த அனுபவங்களுக்கூடாக காயங்களுக்கு ஊடாக மட்டும் போராட்டத்தைப் பார்க்கவில்லை.ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் நமது மக்களுக்கு ஊடாகவே அவர்கள் அரசியலைப் பார்த்தார்கள்; வாழ்ந்தார்கள்.

தமிழ் மக்களின் போராட்டம் தனி ஒரு இயக்கத்தின் போராட்டமோ அல்லது தனி ஒரு கட்சி கட்டிக்காத்த போராட்டமோ அல்ல.அதை இயக்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கூடாகவோ அல்லது கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கூடாகவோ அல்லது இயக்க விசுவாசங்களுக்கு ஊடாகவோ அல்லது இயக்க வெறுப்புக்கூடாகவோ பார்த்தால் மக்களோடு நிற்க முடியாது. மக்களோடு நின்றால் போராட்டத்தை,தமிழ்த்தேசிய அரசியலை ஒரு இயக்கத்துக்குள்,ஒரு கட்சிக்குள் பெட்டிகட்டவும் முடியாது.அது தமிழ் மக்களுடைய அரசியல்.

சிவாஜி,எல்லாவிதமான விமர்சனங்களுக்கும் அப்பால்,அந்தப் பண்புரு மாற்றத்தைப் பிரதிபலித்தார். அவரை எந்தப் பெட்டிக்குள்ளும் வைத்துப் பார்க்க முடியாது.கட்சிகளுக்குள்ளும் பெட்டிகட்ட முடியாது. கூட்டுக்களுக்குள்ளும் பெட்டிகட்ட முடியாது.அவர் எந்தச் சட்டகத்துக்குள்ளும் அடங்காத,நிறுவனங்கள்,கட்சிகளுக்குள் தன்னைச் சுதாகரித்துக் கொள்ளாத ஒரு தனி ஓட்டம்.

நினைவேந்தலை ஒரு தனி மனிதராக முன்னெடுத்தது போலவே போராட்டங்களிலும் சில சமயங்களில் தனி மனிதராக முடிவெடுத்து விடுவார், சிவாஜி என்றாலே பெரும்பாலும் தனி ஓட்டம்தான்.நிறுவன மயப்பட்டு செயற்பட விரும்பாத,நிறுவனங்களுக்குள் அடங்க மறுக்கும் ஓர் ஆளுமை அவர்.அதனாலேயே நிறுவன மயப்பட்ட செயற்பாடுகளைக் குழப்பக் கூடியவர். அவருடைய தனி ஓட்டம், தீவிரமான சாகச நடவடிக்கைகள் என்பவற்றின் பின்னணியில் அவருடைய கிறுக்குத்தனத்திற்கும் பங்கு உண்டு.

பகை பாராட்டதவர்; எளிமையானவர்; இரக்கத்தைக் கோரும் முகம். சன்னமான குரல். தன்னைத் தற்காத்துக் கொள்ளாத துணிச்சல். தன் உடலைத் தானே பராமரிக்காத அலட்சியம். தன் முடிவுகளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத கிறுக்குத்தனம். எந்த ஒரு கட்டமைப்புக்குள்ளும் தன்னைச் சுதாகரித்துக் கொள்ள விரும்பாத தனி ஓட்டம். இதுதான் சிவாஜிலிங்கம்.

காலில் பெரிய பந்தத்தோடு இழுத்த இழுத்து நடப்பார்.கடந்த 17 ஆண்டுகளில் அதிகமாக விசாரணைகளுக்கு உள்ளாகிய மிகச்சில அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர்.இறக்கும்வரை மரணப்படுக்கையில் இருந்தபோதும் அவரை விசாரிப்பதற்கு அவருடைய வீட்டுக்குப் போனார்கள்.

2019இல் ஜனாதிபதித் தேர்தலின்போது ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக கட்சிகளை சந்தித்தபோது,நல்லூர் சின்மயா மிஷினில் சிவாஜியைச் சந்தித்தோம்.சிவாஜி இடைக்கிடை எழுந்து கழிப்பறையை நோக்கி நடந்து போவார்.அவர் நடக்கும்போது சிறுநீர்த் துளிகள் சிந்தும். இது தொடர்பாக உரையாடியபோது தமிழ் மக்கள் பேரவையில் இருந்த ஒரு மருத்துவ நிபுணர் சொன்னார்,அவருக்கு இருதய நோய் உண்டு. கவனிக்காமல் திரிகிறார்.சிலசமயம் உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம் என்று. தன் உடலைக் கவனிக்காத ஒரு பிறவி.

ஒரு சிகிச்சைக்காக இந்தியாவுக்குப் போக விரும்பினார்.ஆனால் விசா கிடைக்கவில்லை. அப்பொழுது அவருக்கு இந்திய விசா தடுக்கப்பட்டிருந்தது. ஜெய்சங்கர் இந்திய வெளியுறவு அமைச்சராக வந்த பின்னர்,அவருக்கும் தனக்கும் உள்ள முன்னைய தொடர்புகளைப் பயன்படுத்தி சிவாஜி மீண்டும் வீசாவுக்கு விண்ணப்பித்தார்.விசா கிடைத்தது. இந்தியாவுக்குப் போய் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

இந்தியாவிலும் இலங்கையிலும் பெற்றுக்கொண்ட சிகிச்சைகள் பலனளிக்கவில்லை.ஆனால் தனது சிகிச்சைக்காக அவர் பகிரங்க வேண்டுகோள் விடுத்தபோது அவருக்கு உதவப் பலரும் முன் வந்தார்கள். தமிழ்த் தேசியப் போராட்டப் பரப்பில் ஒரு பகிரங்க வேண்டுகோளை விடுத்து அவ்வாறு பெருந்தொகை நிதியைத் திரட்ட முடிந்த நபர் அவர்.அது தமிழ் மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த அபிமானத்தைக் காட்டியது. அவருடைய இறுதி நிகழ்வு அவருக்கு இருந்த மக்கள் அபிமானத்தைக் காட்டியது.

ஒரு தனிப்பட்ட உரையாடலின்போது சிவாஜிலிங்கம் எனக்குச் சொன்னார்.இந்திய அமைதி காக்கும் படை நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த ஒரு பின்னணியில்,கொழும்பில்,ஒரு ஹோட்டலில் நடந்த ஒரு சந்திப்பின்போது ஜெய்சங்கர் தன்னுடைய சிறிய மகனையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தாராம். சிவாஜியோடு கதைக்கும்போது தனது மகனைச் சுட்டிக்காட்டி இந்தப் பையன் வளர்ந்து பெரியவன் ஆனாலும்கூட உங்களுடைய பிரச்சினை தீரப் போவதில்லை என்று சொன்னாராம்.

இந்திய இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்டு 39 ஆண்டுகளாகிவிட்டன.ஜெய்சங்கர் இப்பொழுது இந்தியாவின் சக்திமிக்க வெளியுறவு அமைச்சராக இருக்கிறார்.அவருடைய மூத்த மகனுக்கு 43 வயதாகிறது.ஆனால் இலங்கை இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. சிவாஜிலிங்கமும் இல்லை.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா