Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 25, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து சிங்கள பேரினவாதிகளையும் அவர்களது அடிவருடிகளையும் தோற்கடியுங்கள்! - நக்கீரன்
[Sunday, 2012-09-02 11:08:49]
News Service

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சி இருக்கின்றன. எதிர்வரும் செப்தெம்பர் 8 ஆம் நாள் தேர்தல் நடைபெற இருக்கிறது. கிழக்கு மாகாணத் தேர்தல் முடிவை இந்தியா மட்டுமல்ல மேற்குலக நாடுகளும் மிக ஆவலோடும் உன்னிப்போடும் கவனித்துக் கொண்டிருக்கின்றன.

  

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவு தமிழ்மக்களுக்கு மிகவும் முக்கியமானது. ததேகூ க்குப் பின்னால் தமிழ்மக்கள் அணிதிரண்டு நிற்கிறார்கள் என்ற செய்தி இந்தத் தேர்தல் மூலம் பன்னாட்டு சமூகத்துக்கும் வெளிநாட்டு இராசதந்திரிகளுக்கும் சொல்லப்பட வேண்டும்.

வடக்கும் கிழக்கும் தமிழர்களது மரபுவழித் தாயகம், அவர்கள் ஒரு தேசிய இனம், அவர்களுக்கு தன்னாட்சி உரிமை உண்டு, இறையாண்மை உண்டு போன்ற கோட்பாடுகளின் அடிப்படையில் இனச் சிக்கலுக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணவேண்டும் என்பதை முன்னிறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது.

இனச் சிக்கல் என்று எதுவும் இல்லை தமிழர்கள் அபிவிருத்தியை மட்டும் கேட்கிறார்கள் என்று ஆணவத்தோடு பேசும் மகிந்த இராசபக்சேக்கு இந்தத் தேர்தல் மூலம் தமிழ்மக்கள் நல்ல பாடம் படிப்பிக்க வேண்டும்.

இலங்கையில் பெரும்பான்மை சிறுபான்மை என்றில்லை எல்லோரும் சமம், எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள், எல்லோரும் நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்று கொச்சைத் தமிழில் மகிந்த இராசபக்சே பேசுகிறார். ஆனால் சிங்கள தேசிய கீதத்தை தமிழர்களது தொண்டைக்குள் திணிக்கிறார். தமிழ் ஊர்ப்பெயர்களை, தெருக்களின் பெயர்களை தனிச் சிங்களத்துக்கு மாற்றுகிறார்.

வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச செயலாளர் பிரிவின் பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட தமிழர் பூர்வீகக் கிராமமான அரியகுண்டான், அதாவெட்டுவெவ என்று சிங்களப் பெயரிடப்பட்டு வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்குப் பெயர்தான் சமத்துவமா? இதுதான் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கமா?

நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவின்கீழிருந்த 90 ஹெக்டர் வயலுக்குப் பாசனத்தை வழங்கும் 14 சதுர கிமீ நீரேந்தும் பரப்பளவுள்ளதுமான கொக்கைச்சாண்குளம் மற்றும் நீர்ப்பாசனப் பகுதிப் பூர்வீகத் தமிழ்க் கிராமத்தவர்கள் இனக்கலவரத்தில் வெளியேற, இவர்களது 200 ஏக்கர் வயற்காணி மற்றும் குடியிருப்புக் காணிகளில் 2010 ஆம் ஆண்டில் 165 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர். கொக்கைச்சாண்குளம் கிராமத்திற்கு 'கலாபோகஸ்வௌ' என சிங்களப் பெயர் சூட்டப்பட்டு வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச செயலாளர் பிரிவில் இணைக்கப்பட்டு தற்போது மற்றுமொரு நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்குப் பெயர்தான் சமத்துவமா? இதுதான் நல்லிணக்கமா? இது அப்பட்டமான இனச் சுத்திகரிப்பு இல்லையா? இது பண்பாட்டு சிதைப்பில்லையா?

முல்லைத்தீவு மாவட்டம் நெலுக்குளம் பகுதியில் 400 க்கும் அதிகமான சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற கரையோரக் கிராமங்களில் நூற்றுக் கணக்கான சிங்கள மீனவர்கள் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் நிரந்தரமாகக் குடியேற்றப்பட்டுள்ளார்கள். இந்தக் குடியேற்றத்தால் தமிழ் மீனவக் குடும்பங்கள் மீன்பிடித் தொழில் செய்து வாழமுடியாது இருக்கிறது.

பக்கத்தில் வாகரையில் உள்ள பட்டிப்பளை பிரிவில் 107 சிங்களக் குடும்பங்களை அரசு குடியேற்றியுள்ளது. இதனால் மீன்பிடித் தொழில் செய்து வந்த தமிழ்க் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சீனன் வெளி பகுதியில் கடற்கரையோரமாக அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியை ஆக்கிரமித்து சிறீலங்கா கடற்படை முகாம் அமைத்துள்ளது. இதனால் காணிச் சொந்தக்காரர்கள் தமது காணிகளில் குடியிருக்கவோ பயிர்ச் செய்கையில் ஈடுபடவோ முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள காணிகள் தோப்பூர் பிரதேச முஸ்லிம் மக்களினதும் சீனன்வெளி பிரதேச தமிழ் மக்களினதும் காணிகளாகும்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதையும் இராணுவம் மற்றும் கடற்படைத் தளங்கள் அமைப்பதற்குத் தனியார் காணிகள் அபகரிகப்படுவதையும் தாங்கிய செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.

சாவகச்சேரியில் அமைந்தள்ள காவல் நிலையத்துக்கு முன்பாக நீண்டகாலமாக இருந்த இந்துக் கோவிலின் ஒருபகுதியை இடித்துவிட்டு அதன் அருகில் உள்ள அரசமரத்தின்கீழ் விசாலமான புத்தர் கோயில் ஒன்று துரிதமாக அமைக்கப்பட்டுவருகின்றது. இதனை சிங்களக் காவல்துறையினரே முன்னின்று செய்கிறார்கள்.

இதுவரை காலமும் பொதுமக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளிலும் இராணுவம் மற்றும் காவல் நிலையங்கள் உள்ள பகுதிகளிலும் சிறு புத்தர் சிலை அமைத்து வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளைக் கைப்பற்றி இவ்வாறான புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது வழிபாடுசெய்துவரும் இந்துக் கோயிலொன்று உடைக்கப்பட்டு அக்கோயில் அமைந்திருக்கும் இடத்தில் புத்தவிகாரை அமைக்கப்படுகிறது. இது இந்து சமயத்தினை இழிவுபடுத்தும் அதேவேளை பவுத்த பேரினவாதத்தின் கட்டு மீறிய வெறித்தனத்தைக் காட்டுகிறது.

குடாநாட்டில் தனியார் காணிகள் மற்றும் கட்டிடங்கள் 1000 கும் அதிகமான இடங்களில் இராணுவம் நிலை கொண்டுள்ளது.

இராணுவம் இவ்வாறு நிலை கொண்டுள்ள தென்மராட்சிப் பிரதேசத்தில் 300 ஏக்கர் நிலத்தையும் தெல்லிப்பளை பிரதேசத்தில் 61 ஏக்கர் நிலத்தையும் கைப்பற்றுவதற்கு இராணுவம் முயற்சி செய்து வருகிறது.

தற்போது யாழப்பாண மாவட்டத்தில் வீட்டுடன் இணைந்த காணிகள் 57 இலும் 5 வெற்றுக் காணிகளிலும் அரச காணி 1 இலும் வணிக நிறுவனம் 1 இலும் காவற்றுறையினர் குடிகொண்டுள்ளனர்.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் 716 காணிகள் உள்ளதாகக் கருதப்படுகிறது. இதில் வீட்டுடன் இணைந்த 378 காணிகளும் 283 வெற்றுக் காணிகளும 9 அரச காணிகளும் 46 வணிக நிறுவனங்களும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் மொத்தம் 253 காணிகள் உள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இதில் வீட்டுடன் 123 இணைந்த காணிகளும் 104 தனியார் காணிகளும் 19 அரச காணிகளும் 7 வியாபார நிறுவனங்களும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

அரசியலுக்கு அப்பால், இராணுவ மயப்படுத்தல், சிங்கள மயப்படுத்தல், பவுத்த மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக அதி வணக்கத்துக்குரிய மன்னார் மறை மாவட்ட பேராயர் இராயப்பு யோசேப் அடிகளாரே ஓங்கிக் குரல் கொடுத்துவருகிறார். இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

போர் முடிந்து விட்டதாகக் கூறப்பட்ட போதும் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு முழுமையான போர் தற்பொழுது தொடக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தற்போது நடைபெறும் மண் பறிப்பு உறுதிப்படுத்துகின்றன என்று கொழும்பிலிருந்து வெளிவரும் முக்கிய தமிழ் வார செய்தித்தாளுக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தின் பல பகுதிகளில் இராணுவ தேவைகளுக்காகவும் இராணுவ குடியிருப்புக்களுக்காவும் 20,000 ஆயிரம் ஏக்கருக்கு மேலான நிலம் கபளீகரம் செய்யப்பட்டுள்ளதென ததேகூ இன் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரமேச்சந்திரன் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். இராணுவம் சட்டவிதிகளுக்குப் புறம்பான வகையில் எந்தக் காணியையும் கையகப்படுத்துகிறது. அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட காணிகளில் "இது இராணுவப் பிரதேசம்" என அறிவுப்புப் பலகையை சிங்களத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கு 59.5 ச.கிமீ. பிரதேசத்தில் 45 கிராமசேவையாளர் பிரிவில் மக்கள் வாழ்ந்தார்கள். 2011 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து இதுவரை 21 கிராமசேவையாளர் பிரிவுகளில் மட்டும் மீளக் குடியேற மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அதுவும் அரைகுறையாகவே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 23 கிராம சேவகர் பிரிவுகள் இன்னமும் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் சிக்கியுள்ளது. அதில் வாழ்ந்த 26,281 பேர் (7,273 குடும்பங்கள்) முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்கிறார்கள்.

இப் பிரதேச மக்களில் 6,000 மக்கள் வரை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் அகதி முகாம்களில் அல்லற்படுகிறார்கள். சுமார் 25,000 மக்கள் நண்பர்கள் வீடுகளிலும் வாடகை இடங்களிலும் இருக்கிறார்கள்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் 18 உயர் பாதுகாப்பு வலயங்கள் இருக்கின்றன. இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் மொத்த 880 சகிமீ நிலப்பரப்பில் 260 சகிமீ பரப்பளவாகும்.

முல்லைத்தீவில், கிளிநொச்சியில் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் 3 இலட்சம் மக்கள் தறப்பாள் கொட்டில்களில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 44,559 பேர் (12,249 குடும்பங்கள்) தொடர்ந்தும் ஏதிலிகளாக வாழ்ந்து வருவதாக இடம்பெயர்ந்தோர் நலன்புரி அமைப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் 53 நலன்புரி நிலையங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடங்கும் சுமார் 8,000 ஏக்கர் காணிகளைத் தமது பயன்பாட்டுக்கு வழங்குமாறு இராணுவம் நெருக்கடி கொடுக்கிறது. தற்போது அந்தப் பகுதியை முழுமையாக ஆக்கிரமித்துள்ள இராணுவம் மற்றும் கடற்படை இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறது.

தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 23 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 7,410 ஏக்கரும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 370 ஏக்கரும் இதில் அடங்குகிறது. 1990 ஆம் ஆண்டு முதல் இராணுவம் 8,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கின் சில பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.

இந்தப் பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு மக்கள் மீளக்குடியமர்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் பிரதேசத்தினுள் 18 கிராம சேவையாளர் பிரிவுகள் முழுமையாகவும் 7 கிராம சேவையாளர் பிரிவுகள் பகுதியாகவும் உள்ளடங்குகின்றன. இந்தப் பகுதிகளுக்குள் மீளக்குடியமர்வதற்கு 7,000 குடும்பங்கள் வரை ஏற்கனவே விண்ணப்பித்துவிட்டு மீள்குடியமர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

சம்பூர் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இவ்வூர் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டது. மூதூர் நகரிலிருந்து 5 கிமீ தொலைவிலுள்ள சம்பூர் பிரதேசம் 2 கிராம அதிகாரி பிரிவுகளைக் கொண்டு 35.9 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. சம்பூர் வயல்கள் நிறைந்ததும் கடல் மற்றும் குளங்களை கொண்டதுமான‌ அழகிய கிராமமாகும். அத்தோடு இப்பிரதேசத்தில் உள்ள மற்றய கிராமங்களுக்கும் எடுத்துக்காட்டாக உள்ள ஒரு கிராமமாகும்.

2007 ஆம் ஆண்டு யூலை மாதம் சம்பூரை சிங்கள இராணுவம் கைப்பற்றியது. அதனை அடுத்து சம்பூர் மற்றும் மூதூர் கிழக்குப் பகுதியை உள்ளடக்கிய பிரதேசங்கள் அதிவுயர் பாதுகாப்பு வலயமாகச் சிறப்பு அரசிதழ் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. அங்கே மக்கள் மீளக்குடியேற முடியாது என்றும் மீறி அப்பகுதிக்குள் நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்குள் சம்பூர், கடற்கரைச்சேனை, கூனித்தீவு, சூடைக்குடா மற்றும் இளக்கந்தை ஆகிய 5 பாரம்பரியத் தமிழ்க் கிராமங்களும் அடங்குகின்றன.

மூதூர் பிரதேச செயலகத்தின் 2008 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின்படி இப்பிரதேசத்தில் 1940 குடும்பங்களைச் சேர்ந்த 7494 பேர் வாழ்ந்து வந்தனர். இந்த மக்கள் மொத்தம் 3,500 ஏக்கர் நெற்காணி, 600 ஏக்கர் குடியிருப்புக் காணிக்குச் சொந்தக்காரர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசின் தேசிய அனல் சக்திக் கூட்டுத்தாபனமும் சிறிலங்கா மின்சார சபையும் இணைந்து சம்பூரில் திருகோணமலையில் 500 மெகா வார்ட் அனல் மின் உற்பத்தி நிலையத்தை 500 ஏக்கர் நிலப்பரப்பில் நிருமாணித்து வருகிறது.

இத் திட்டம் காரணமாக அங்கு வாழ்ந்து வந்த 7,494 பேர் தெருவோரத்துக்கு வந்துள்ளார்கள். அவர்கள் சிறு தறப்பாள் கொட்டில்களில் கடந்த 5 ஆண்டுகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்மக்கள் வாழந்த சுமார் 500 வீடுகளை எவ்வித முன்னறிவித்தலுமின்றி மகிந்த இராசபக்சே அரசு தரைமட்டமாக்கியது.

சம்பூர், மூதூர் கிழக்கு ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய ஆறு கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள ஏறத்தாள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்களின் பூர்வீக நிலங்கள் அரசின் இந்த நடவடிக்கையால் அபகரிக்கப்பட்டது. மொத்தம் 5547 சதுர மீற்றர் தமிழர் நிலம் அரசினால் கபளீரம் செய்யப்பட்டு விட்டது.

உயர்பாதுகாப்பு வலயங்கள் எனத் தாயகத்தின் வளமான நிலங்கள் முழுவதையும் ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்கள இராணுவம் இன்று போர் முடிந்துள்ள நிலையில் உயர்பாதுகாப்பு வலயங்கள் எதற்காக எனக் கேள்வி எழுப்பப்பட்டால் அவை அபாயகரமான பிரதேசங்கள் என்றும் கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்றும் நேரத்திற்கொரு கதை சொல்லிக் கொண்டிருக்கின்றது.

மேலும் வி.புலிகள் வசம் இருந்த நிலங்கள், அவர்களுக்கு விற்கப்பட்ட காணிகள் போன்றவற்றை சிங்கள இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. மறுபுறத்தில் தொழிலுக்காக என்று கூறிக்கொண்டு வந்து தங்கும் சிங்களவர்கள் சில நாட்களிலேயே நிரந்தர வதிவுரிமை கேட்டவுடன் அவை வழங்கப்படுகின்றன.

போரில் பாதிக்கப்பட்ட மூன்ற இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இன்னமும் அவர்களது சொந்தக் காணியில் குடியமர்த்தப்படவில்லை. கேட்டால் கண்ணிவெடி அகற்றப்படவில்லை என்கிறார் மகிந்த இராசபக்சே. ஆனால் சிங்களவர்கள் அந்த இடங்களுக்கு சுற்றலா சென்று திரும்புகிறார்கள்! அதுவும் கொஞ்நஞ்சமில்லை. மே 2009 க்குப் பின்னர் 125 இலட்சம் (சிங்கள) மக்கள் வடக்குக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளார்கள். ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் 100,000 சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார்கள். அதே காலகட்டத்தில் 10,000 ஊர்திகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளன.

போர் முடிந்து 3 ஆண்டுகள் கழிந்த பின்னரும் வடக்கு கிழக்கில் சிவில் நிருவாகம் முடக்கப்பட்டுளளது. இராணுவ ஆட்சியே தொடர்கிறது. வடக்கு கிழக்க ஆளுநர்கள் ஓய்வு பெற்ற சிங்கள இராணுவ தளபதிகள். திருகோணமலை, அம்பாரை, மன்னார், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்கள் சிங்களவர்கள். இதில் திருகோணமலை அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஓய்வு பெற்ற இராணுவ தளபதிகள். கிழக்கு மாகாணசபை செயலர் சிங்களவர்.

இதுதான் மகிந்த இராசபக்சே கூறும் இனங்களுக்கு இடையிலான சமத்துவமா? நல்லிணக்கமா?

இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் சிவில் நிர்வாகத்தினால் நிருவகிக்கப்பட வேண்டும் எனவும் கட்டுப்பாடற்ற உச்ச நடமாட்ட சுதந்திரத்தை இடம்பெயர்ந்த மக்களுக்கு உறுதி செய்ய வேண்டும் எனவும் அய்.நா. உயர் தூதுவர் ஜோன் ஹோம்ஸ் கோரிக்கை விடுத்தார். ஆனால் அது மகிந்த இராசபக்சே காதில் விழவில்லை.

வி.புலிகளுக்கு இராணுவத் தீர்வு, தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்று போர் நடக்கும் போது மகிந்த இராசபக்சே திருவாய் மலர்ந்தார். வி.புலிகளுக்கு எதிரான போர் அவர்கள் கைகளில் சிக்குண்டு கிடக்கும் தமிழர்களை விடுவிக்க மேற்கொண்டட மனிதாபிமான நடவடிக்கை என்று மகிந்த இராசபக்சே புளுகினார். இன்று வடக்கில் 8 பொதுமக்களுக்கு ஒரு இராணுவம் என்ற அடிப்படையில் தமிழ்மக்கள் இராணுவப் பிடிக்குள் அகப்பட்டு மூச்சுவிட முடியாது திணறுகிறார்கள்.

அவர்களது கலாசாரம் சீரழிக்கப்படுகிறது. அவர்களது சுதந்திரம் சப்பாத்துக் காலில் போட்டு மிதிக்கப்படுகிறது. தமிழ்மக்கள் போரில் வெற்றி கொள்ளப்பட்ட அடிமைகள் என நடத்தப்படுகிறார்கள். சிங்கள இராணுவத்தின் அனுமதியின்றி தேர், திருவிழா, திருமணம், பூப்பு நீராட்டுவிழா, விளையாட்டுப் போட்டிகள், கூட்டங்கள் எதுவும் நடத்த முடியாது!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து, இராணுவத்தினருக்கான படைத்தளங்கள், குடியிருப்புக்கள், உல்லாச விடுதிகள், நட்சத்திர விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதுடன் இராணுவத்தின் முழுமையான ஆதரவுடன் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இவை குறித்து அறிந்தும் அறியாத நிலையில் முழு அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மற்றும் அரை அமைச்சர் கருணா போன்றோர் உள்ளனர்.

மகிந்த இராபக்சே சிங்கள இராணுவத்தைக் கொண்டு வட கிழக்கை பவுத்த மயமாக்கித் தமிழர்களது பண்பாட்டை, தேசிய அடையாளத்தை அழித்து வருகிறார். தெற்கே கனகராயன் குளம் தொடங்கி வடக்கே மாதகல் வரை பவுத்த விகாரைகள், பவுத்த தூபிகள், புத்தர் சிலைகள் பொதுக் காணிகளிலும் தனியார் காணிகளிலும் இராணுவம் நிர்மாணித்து வருகிறது.

மே,2009 க்குப் பின்னர் வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் சிங்களப் படையினரது இரும்புப் பிடிக்குள் சிக்கி அடிமைகள் போல் வாழ்கிறார்கள். அவர்களது வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது. வடக்கு ஒரு திறந்த வெளிச் சிறைசாலையாகக் காட்சி அளிக்கிறது.

எனவே தமிழ்மக்களது வீடுவாசல், காணிபூமிகளைப் பறித்தவர்களை, அவர்களது வாழ்வுரிமையைப் பறித்தவர்களை, அவர்களது வாழையடி வாழை என வந்த பண்பாட்டை சிதைத்தவர்களை எமது உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்தவர்களை, தமிழ்மக்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையைத் திட்டவட்டமாக மறுத்தவர்களை, உயிராய் வளர்த்த எமது விடுதலைக் கனவைக் கலைத்தவர்களை கிழக்க மாகாண மக்கள் இத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.

கிழக்கு மாகாணம் தமிழ்த் தேசியத்தின் கோட்டை. என்பதை கடந்த காலத் தேர்தல்களில் மக்கள் எண்பித்துக் காட்டியுள்ளார்கள்.

வன்னியில் கொல்லப்பட்ட 40,000 மக்கள் கொட்டிய குருதி, விட்ட கண்ணீர், சிந்திய வெயர்வை பிள்ளையான், கருணா கைகளில் படிந்துள்ளது!

தமிழினத்தின் போராட்டத்தை முதலமைச்சர் பதவிக்காக சிங்கள-பவுத்த பேரினவாதிகளுக்குக் காட்டிக் கொடுத்த பிள்ளையானை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்! கூட்டிக் கொடுக்கும் கருணாவின் முகத்தில் கரி அப்பவேண்டும்!

மக்கள் அவர்களது கையில் இருக்கும் வாக்குச் சீட்டு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி சிங்கள - பவுத்த பேரினவாதத்தின் மொத்த வடிவமான மகிந்த இராசபக்சேயின் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியை இத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். அதற்கான பொன்னான வாய்ப்பு தமிழ்மக்களுக்குக் கிடைத்துள்ளது.

மிரட்டலுக்கு அஞ்சாது, அடக்குமுறைக்கு அடிபணியாது, சலுகைகளுக்கு மயங்கிவிடாது எமது உறவுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். தேர்தல் முடிவைப் புலம் பெயர் தமிழர்கள் மட்டுமல்ல உலக நாடுகளும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

மட்டக்களப்பு கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்!Top News
[Saturday, 2013-05-25 21:09:14]

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கிராம எல்லையில் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்வசத்தின் திருக்குளிர்த்தியாடும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இவ்வாலய உற்சவம் கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமாகி சனிக்கிழமை காலை தீ மிதிப்பு, திருக்குளிர்த்தியாடும் வைபவத்துடன் நிறைவுபெற்றுள்ளது. இறுதி நாள் அன்னதானக் குழுவினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. தீ மிதிப்பு நிகழ்வில் ஐநூக்கு மேற்பட்ட பக்தர் கலந்து கொண்டிருந்தனர்.



வெசாக் தினத்தில் தீக்குளித்த பிக்கு மரணம்!
[Saturday, 2013-05-25 21:04:22]

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் மிருக வதையினை கண்டித்து தனக்கு தானே தீமூட்டிக்கொண்ட பௌத்த பிக்கு, சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி தலதா மாளிகைக்கு முன்பாகவே நேற்று வெள்ளிக்கிழமை அவர் தீ மூட்டிக்கொண்டார். வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே அவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளார்.



இலங்கையைப் போல சிறந்த நிர்வாகத்தைக் கொண்ட நாடு உலகில் கிடையாது - பிரதமர்
[Saturday, 2013-05-25 20:09:26]

இலங்கையில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் சர்வதேச நீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பிரதமர் டி.எம். ஜயரட்ண குற்றம் சாட்டியுள்ளார். கண்டி தலதா மாளிகையில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு நாடோ அல்லது இனவாதிகளோ நாட்டை அபகரிக்க இடமளிக்க முடியாது. நாட்டில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சூழ்ச்சிகளை சர்வதேம் மேற்கொண்டு வருகின்றது. எனவே இந்த விடயத்தில் அனைவரும் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமாகும். நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் சகல மதங்களும் பராமரிக்கப்பட்டு மதத் தலங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இங்கு மதங்களுக்கிடையில் எத்தகைய ஏற்றத்தாழ்வும் கிடையாது.



அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த வைத்தியர் - கிண்ணியாவில் சம்பவம்
[Saturday, 2013-05-25 18:59:57]

கிழக்கு மாகாணத்தில் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியினை வைத்து தைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக கடந்த 22 ஆம் திகதி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அப்பெண்ணின் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றுகுள் ஊசி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மீண்டும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காக அப்பெண் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



சார்க் நாடுகளின் திரைப்பட விழா இ்ம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பம்..
[Saturday, 2013-05-25 18:49:27]

இலங்கையிலுள்ள தெற்காசிய நாடுகளின் கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்துள்ள சார்க் நாடுகளின் திரைப்பட விழா இம்மாதம் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் தவிர்ந்த ஏனைய நாடுகள் இந்த திரைப்பட விழாவுக்காக சினிமா திரைப்படங்களையும் விவரணத்திரைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விழாவின் போது தெரிவு செய்யப்படும் சிறந்த திரைப்படங்கள் விவரணப்படங்கள் மற்றும் சிறந்த நடிகர் நடிகைகளுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளன. கடந்த ஆண்டில் இலங்கை திரைப்படம் ஒன்றே மேற்படி விழாவின் போது சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டது.



வராலற்று சிறப்பினைச் பதிவு செய்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு !Top News
[Saturday, 2013-05-25 17:43:54]

ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வராலற்று சிறப்பினைச் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய இடம்பெற்றிருந்த மாநாடும் அமைந்திருந்ததென மாநாட்டின் செயற்குழு தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டு செயற்குழுத் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : அடிமை ஒழிப்புக்குக் குரல் கொடுத்த பெருமகன் திரு. 'தாடுஸ் ஸ்டீவன்சன்' அவர்களின் பிறப்பிடமாகிய அமெரிக்காவின் பென்சில்வேனிய மாநிலத்தின் லாங்காஸ்டர் நகரில் தமிழீழசுதந்திர சாசனம் மே-18மம் நாள் சனிக்கிழமை (18-05-2013) உணர்வெழுச்சியுடன் முரசறையப்பட்டது.



கைதிகளுக்கு இம்முறை பொதுமன்னிப்பு இல்லை - சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர்!
[Saturday, 2013-05-25 17:39:43]

இம்முறை வெசாக் பண்டிகையின் போது சிறைக் கைதிகள் எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லையென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார். சிறு குற்றங்களை புரிந்து தற்போது சிறையில் உள்ள குற்றவாளிகள் சிலரின் பெயரை நீதி அமைச்சுக்கு பரிந்துரை செய்தபோதிலும் அதற்கான அனுமதி தமக்கு கிடைக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



கொழும்பு துறைமுக தீ விபத்து தொடர்பில் 13 பேரிடம் வாக்கு மூலம்!
[Saturday, 2013-05-25 17:31:37]

கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் இதுவரையிலும் 13 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளும் இன்று இடம்பெற்றன. கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் நேற்று 24 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தீ விபத்தையடுத்து களஞ்சியசாலை தொகுதியை பொலிஸார் பொறுப்பேற்றதுடன் விசாரணைகளையும் துரிதப்படுத்தினர். இந்நிலையிலேயே இதுவரையிலும் 13 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.



தேன்மதுர தமிழ் இசையால் கோடிக்கணக்கான இதயங்களை கட்டிப்போட்ட மதுரக் குரல் இன்று ஓய்ந்தது! Top News
[Saturday, 2013-05-25 17:26:59]

பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார். இருதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார். ஆயினும் இன்று சனிக்கிழமை சற்று நேரம் முன்னதாக அவர் தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 91. தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பின்னணி பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 1923 ஆம் ஆண்டு மதுரையில் சௌராஸ்டிர குடும்பத்தில் பிறந்த இவரது தகப்பனார் பெயர் மீனாட்சி ஐயங்கார். 1950 ஆம் ஆண்டும் கிருஷ்ண விஜயம் என்னும் படத்தில் 'ராதே என்னை விட்டுப் போகாதடி'' என்னும் பாடலுடன் இவர் அறிமுகமானார். தமிழ் தவிர தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலுமாக 10, 000 பாடல்களுக்கும் அதிகமாக அவர் பாடியிருக்கிறார்.



கிளி.வட்டக்கச்சி இந்து மயானத்திற்கு எரிகொட்டகை கையளிப்பு! Top News
[Saturday, 2013-05-25 17:19:40]

வட்டக்கச்சி மம்மில் இந்து மயானத்திற்கு இராமநாதபுரத்தைச் சேர்ந்த அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவரின் குடும்பத்தவரால் எரிகொட்டகை அமைத்து வழங்கப்பட்டது. அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்களது நிதிப் பங்களிப்பில் வட்டக்கச்சி அறிவொளி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இவ் எரிகொட்டகை அமைக்கப்பட்டு, வட்டக்கச்சி கிராம முன்னேற்ற சங்கங்களிடம் கையளிக்கும் நிகழ்வு கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் வி.சுவிஸ்கரன் தலைமையில் மம்மில் இந்து மயானத்தில் இடம்பெற்றது.



இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பணிப்பெண் ஜோர்தானில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்! Top News
[Saturday, 2013-05-25 17:15:20]

ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் கறுவாக்கேணியை சேர்ந்த 21 வயதான நாகேந்திரன் காந்திமதி என்ற பெண் ஜோர்தானில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இம்மாதம் 19-ம் திகதி அவரது குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 6-ம் திகதி உயிரிழந்ததாகக் கூறப்படும் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் தமக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னரே அறிவிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் பிபிசி தமிழோசையிடம் கூறுகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 22ம் திகதி இவர் வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்தான் சென்றுள்ளார்.



இளம் பெண்ணை மிரட்டி பல தடவை பாலியல் வல்லுறவு - படத் தயாரிப்பாளர் கைது!
[Saturday, 2013-05-25 14:30:48]

யுவதியொருவரை தொடர்ச்சியாக மிரட்டி வல்லுறவுக்குட்படுத்தி வந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரொருவரை நாரஹெம்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யுவதி அதுருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யுவதி சினிமாவில் நடிப்பதற்காக தயாரிப்பாளரிடம் வந்துள்ளதாகவும் அவருக்கு வாய்ப்பு தருவதாகக் கூறி அவரை நிர்வாணமாக படமெடுத்து பின்னர் அதனை வெளியிடப்போவதாக மிரட்டியே குறித்த நபர் தொடர்ச்சியாக வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.



முக்கோண பாதையில் 3 கோள்கள் - இலங்கையர்கள் பார்வையிடலாம்!
[Saturday, 2013-05-25 14:27:24]

சூரியனை சுற்றியுள்ள கோள்களில் மூன்று கோள்கள் முக்கோண பாதையில் தற்போது சுற்றிவருவதை வானத்தில் பார்க்கலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். இரவில் வானத்தில் தெட்டத்தெளிவாக தெரிகின்ற சனி, கோள்மண்டத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் மற்றும் சூரியனுக்கு மிகவும் அண்மையில் இருக்கின்ற புதன் ஆகிய கோள்களே முக்கோண பாதையில் சுற்றிவருகின்றன. இலங்கையின் வடமேல் வானத்திலேயே இதனை பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ள பேராசிரியர் சந்தன ஜயரத்ன இது போன்றதொரு நிகழ்வை 2021 ஆம் ஆண்டே பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



23வது ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் திங்களன்று ஆரம்பம்!
[Saturday, 2013-05-25 14:21:40]

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் ஹூன் மாதம் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த 23 ஆவது கூட்டத்தொடரின் அமர்வுகளின் போது நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பல்வேறு நாடுகள் தொடர்பில் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன. 47 உறுப்பு நாடுகள் இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதுடன் மேலும் பலநாடுகளும் அவதானிப்பு நாடுகளாகவும் கலந்துகொள்ளவுள்ளன.



ஈழத்தமிழருக்கு ஆதரவான கட்சி விரைவில் புதுடில்லியில் உதயமாகும் - தா.பாண்டியன்!
[Saturday, 2013-05-25 14:13:19]

புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சென்னையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பாண்டியன் இதனைத் தெரிவித்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுமிக்க ஆட்சியொன்று புதுடில்லியில் வெகுவிரைவில் அமையும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை விரைவாக எட்டுவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க முடியும் என்றும் பாண்டியன் தனது உரையில் குறிப்பிட்டார்.



13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு கோத்தபாயவிற்கு அதிகாரமில்லை - வாசுதேவ நாணயக்கார!
[Saturday, 2013-05-25 14:04:31]

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் முன் வைக்கப்படவுள்ள தனி நபர் பிரேரணை செல்லுபடியற்றதாகும். எனவே, அரசு மேற்படி பிரேரனைக்கு அங்கீகாரம் வழங்காது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.



மட்டக்களப்பு நுழைவாயிலில் வைக்கப்படும் புத்தர் சிலை இனங்களுக்கிடையே மனக்கசப்பை ஏற்படுத்தும் - யோகேஸ்வரன் எம்.பி பிரதமருக்கு கடிதம்!
[Saturday, 2013-05-25 13:57:56]

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது இனங்களுக்கிடையில் மனக்கசப்பை ஏற்படுத்தும் செயலாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். புத்தர் சிலையை நிறுவுதல் தொடர்பில் பிரதமர் தி.மு ஜயரட்னவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



கல்லுடன் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு: முல்லைத்தீவில் சம்பவம்!
[Saturday, 2013-05-25 09:56:07]

முல்லைத்தீவு பனிச்சங்குளப் பகுதியில் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்ததேகிக்கப்படும் நிலையில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நிலையில் இச் சடலம் இருப்பதாகவும் சடலத்திலுடன் கல்லுக்கட்டப்பட்டு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ஆஸிக்கு செல்ல முயற்சித்த 21 இலங்கையர்கள் கேரளாவில் கைது!
[Saturday, 2013-05-25 09:30:44]

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 21 இலங்கை அகதிகள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கியூ பிரிவு பொலிஸார் மற்றும் கேரளப் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின்படி இந்தச் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 7 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் நியூகொச்சின் பகுதி ஹோட்டல் ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னையிலிருந்து ரயில் மூலமாக கேரளா சென்றுள்ளனர்.



திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் விசாரணை செய்யவுள்ள இலங்கை அரசு!
[Saturday, 2013-05-25 09:14:17]

அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை (அமெரிக்கன் கோணர்) அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், திருகோணமலை நகரசபையுடன் கடந்த 22ம் நாள் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது. இந்த உடன்பாடு குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்படாதது சிறிலங்கா அரசாங்கத்துக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.


Mahesan supramaniyam 031109
TDE_Computers2011
AJRwindows22.05.13
INNSYS-20120930
Canada Kanthasamy Kovil
RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
Ramans2011
NIRO-DANCE-100213
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com