Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 20, 2013 [GMT]

  • Welcome
  • Welcome
சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்: (பாகம் - 3)
[Thursday, 2012-08-02 10:40:59]

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு ஆட்சிக்கு வந்த பச்சை - நீல நிறக்கட்சிகள் தமிழர் தாயகத்தில் சிங்களவர்களைக் குடியேற்றுவதில் தமக்குள் இருந்த வேற்றுமைகளை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு கண் துஞ்சாது, பசிநோக்காது, எவ்வெவ்வருமையும் பாராது கருமமே கண்ணாகி ஒற்றுமையோடு உழைத்து வந்திருக்கின்றன. என்னென்ன சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் எந்த ஆட்சியாளர்களது காலத்தில் இடம்பெற்றன என்ற பட்டியலைப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும்.


  

கல்ஓயா (பட்டிப்பளை) - டி.எஸ். சேனநாயக்கா

கந்தளாய் - டி.எஸ். சேனநாயக்கா

அல்லை - டி.எஸ். சேனநாயக்கா - டட்லி சேனநாயக்கா

பதவியா (பாவற்குளம்) - SWRD பண்டாரநாயக்கா

மொறவேவா (முதலிக்குளம்) - சிறீமாவோ பண்டாரநாயக்கா

மகாடிவுலுவேவா (விளாத்திக்குளம்) - ஜே.ஆர். ஜெயவர்த்தனா - காமினி திசநாயக்கா

வெலி ஓயா (மணல் ஆறு) - ஜே.ஆர். ஜெயவர்த்தனா - ஆர். பிரேமதாச - காமினி திசநாயக்கா.

ஆனால் இன்று இவர்கள் எல்லோரையும் மகிந்த இராசபக்சே தூக்கிப் சாப்பிட்டுவிட்டார்! மே 18, 2009 க்குப் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் வரலாறு காணாதவாறு சிங்கள மயமாக்கல், இராணுவ மயமாக்கல், பவுத்த மயமாக்கல் தங்குதடையின்றி இடம்பெற்று வருகிறது. கரையுடைத்த காட்டாறு போல் சிங்களக் குடியேற்றம் அங்கிங்கின்னாதபடி எங்கும் பரவுகிறது. தமிழர்களது காணி பூமியில் இராணுவ முகாம்கள், இராணுவ குடியிருப்புக்கள், இராணுவ நினைவாலயங்கள், சுற்றுலா உல்லாச விடுதிகள், பவுத்த விகாரைகள், பவுத்த தூபிகள், புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டம் திருமுருகண்டி - கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட கிழக்குப் பக்கமாகவுள்ள காட்டுப் பகுதியில் 4,000 ஏக்கர் நிலத்தில் "போர் வீரர் வீட்டுத் திட்டம்" (War Heroes Housing Scheme) என்ற பெயரில் 8,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அரை ஏக்கர் காணியில் கட்டப்படும் இந்த வீடுகளில் போரில் உறுப்புகளை இழந்த படையினர் குடியேற்றம் செய்யப்படுவர். இந்தக் குடியேற்றம் ஒட்டிசுட்டான் பிரதேச சபைப் பகுதிக்குள் வருகிறது. போர் வீரர் வீட்டுத்திட்டம் என்ற பெயரில் 50,000 வீடுகள் கட்டப்படும் என மகிந்த இராசபக்சே அறிவித்துள்ளார். மின்சாரம், குடிதண்ணீர், கழிவறை, வீதிகள், மருத்துவமனைகள், வங்கிகள், சந்தைகள், பள்ளிக்கூடங்கள் எனச் சகல வசதிகளையும் கொண்ட இந்த வீட்டுத் திட்டத்தில் ஒவ்வொரு வீடும் 15 இலட்ச உரூபாய் செலவில் கட்டப்படும்.

அதே சமயம் திருமுருகண்டியில் வாழ்ந்த 126 குடும்பங்கள் இன்று ஏதிலிகளக இடைத்தங்கல் முகாம்களில் தறப்பாள் கொட்டில்களில் வாழ்கிறார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 15 ஏக்கர் தனியார் காணிகள் இராணுவத்தால் வல்வளைப்புச் செய்யப்பட்டு அதில் பாரிய இராணுவ முகாம் உருவாக்கப்பட்டுள்ளது. மாங்குளத்தில் சிறீலங்கா இராணுவத்தின் மூன்றாவது பிரிவு இராணுவ தளம் ஒன்றை உருவாக்க 98 ஏக்கர் (39.67 கெக்டர்) நிலத்தை அபகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் சுமார் 2,200 ஏக்கர் நிலப்பரப்பு படையினரால் அவர்களது தேவைகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் இடம்பெயர்ந்த மக்களை அவர்களது இடத்தில் குடியேற்றுவது சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கிய துணுக்காயில் சிங்கள இராணுவம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளது. தேரங்கண்டலில் 350 ஏக்கர், அமைதிபுரத்தில் 200 ஏக்கர், கோட்டைகட்டியகுளத்தில் 150 ஏக்கர், ஆலங்குளத்தில் 112 ஏக்கர், பழைய முருகண்டியில் 50 ஏக்கர், தென்னியன்குளத்தில் 50 ஏக்கர் ஆகியவையே அபகரிக்கப்படும் நிலங்களாகும்.

எட்டாவது படையணி கைவேலியில் 800 ஏக்கர் காணியை அபகரித்துள்ளது. 68-3 பிரிகேட் வல்லிபுனத்தில் 800 ஏக்கர் காணியை அபகரித்துள்ளது.

தமிழ்மக்கள் அவர்களது சொந்தக் காணிகளில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அவர்களது காணிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள். இதனால் வன்னிக் கடலோரப் பகுதியில் சிங்களக் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே சமயம் ஆறாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் தடுப்பு முகாம்களில் அவர்களது விருப்பத்துக்கு மாறாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். ஒரு சாரார் அவர்களது விருப்பத்துக்கு மாறாக கோம்பாவில் - திம்பிலி பகுதியில் குடியமர்த்தப் பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோர கிராமங்களில் பொதுமக்களுக்குச் சொந்தமான 1500 ஏக்கர் வரையான விவசாய நிலம் படையினரால் திட்டமிடப்பட்ட வகையில் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். அடுத்த இரு ஆண்டுகளில் எல்லையோரக் கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் துரத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்களான கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களுக்குச் சொந்தமான மேற்படி விவசாய நிலங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என்ற காரணத்தை கூறி மக்கள் தமது சொந்த நிலங்களுக்குச் செல்வதற்கான அனுமதியைப் படையினர் தொடர்ந்தும் மறுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு முகத்துவாரம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் காணிகள் தொடர்ந்தும் தெற்கில் இருந்து வந்த சிங்களவர்களால் அபகரிக்கப்பட்டு வருகிறது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அண்மைக் காலத்தில் இப் பகுதியில் 240 ற்கும் மேற்பட்ட சிங்கள குடும்பங்கள் குடியேறியுள்ளன. இந்தக் காணிகள் அனைத்தும் பலதலைமுறைகளாகத் தமிழர்கள் வாழ்ந்த காணிகள். அதற்கு அரசினால் வழங்கப்பட்ட சட்ட ஆவணங்களும் தம்மிடம் உள்ளதாக தமிழ்மக்கள் தெரிவிக்கின்றனர்.

1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிங்களக் குடும்பங்களே தொழில் நிமித்தம் முகத்துவாரம் பகுதியில் தங்கியிருந்தன. எனினும் தற்போது நீர்கொழும்புப் பகுதியைச் சேர்ந்த 240 ற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் முகத்துவாரம் பகுதியில் உள்ள தமிழர்களின் காணிகளை அபகரித்து அடாத்தாகக் குடியமர்ந்துள்ளன.

அத்துடன் முகத்துவாரம் கடற்பகுதியையும் அவர்கள் முழுமையாகத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அங்கு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு நீர்கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளிலும் சொந்தமான வீடுகள், காணிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையில் இருந்து சிங்கவர்களை வடக்கில் குடியேற்றுவதற்கு வசதியாக சீனா பல நெடுஞ்சாலைகளை அமைத்துக் கொடுத்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தரவுகளை http://www.tamilnet.com/pic.html............
என்ற இணையதள முகவரியில் படிக்கலாம்.

இந்தத் தீவிர சிங்கள மயமாக்கலுக்கு வீதிகள், கிராமங்கள், குளங்கள் தப்பவில்லை. வீதிகளுக்குச் சிங்களப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. பெயர்ப்பலகைகள் சிங்களத்தில் மட்டும் எழுதப்படுகிறது. தமிழிலும் எழுதும் போது பிழையாக எழுதப்படுகின்றன. எழுவாய் பயனிலை பொருத்தமின்மை, பால் வழுக்கள், ஒருமை பன்மை தவறுகள். கால வழு, செய்வினை செயற்பாட்டுவினை சிக்கல்கள், வேற்றுமை உருபு இடைச்சொல் குளறுபடிகள் என எண்ணில் அடங்காத எழுத்துப்பிழைகளோடும் கருத்துப்பிழைகளோடும் வட - கிழக்கிலும் ஏனைய மாகாணங்களிலும் அரச, அரச சாற்பற்ற பொது நிறுவனங்களினதும் சமூக அமைப்புக்களினதும் பெயர்ப் பலகைகள் காற்றில் ஆடிக்கொண்டிருக்கின்றன. சப்ரகமுவ மாகாண கட்டடத் தொகுதி என்பது சபரமுவா மாகாண கட்டிடந் தொகுதி என்று பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. கொழும்பு, கொழ்ம்பு, கொழுப்பு என கொலை செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் நெலுக்குளம் பகுதியில் 400 க்கும் அதிகமான சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற கரையோரக் கிராமங்களில் நூற்றுக் கணக்கான சிங்கள மீனவர்கள் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் நிரந்தரமாகக் குடியேற்றப்பட்டுள்ளார்கள். இவர்களை மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி பெருவாரியான மீன்களை அள்ளுகிறார்கள். இதனால் கரவலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் தமிழ் மீனவக் குடும்பங்கள் தமது தொழிலைச் செய்ய முடியாது அல்லல்படுகின்றன.

ஆமையன்குளம் உத்தராயன்குளம் அடையக்கறுத்தாள் பூவாமடுக்கண்டல் எரிஞ்சகாடு நாய்கடிச்சமுறிப்பு தட்டாமலை சகலாத்து வெளி சுவந்தா முறிப்பு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 1500 ஏக்கர் வரையான விவசாய நிலம் கடந்த 1984 ஆம் ஆண்டு தொடக்கம் படையினர் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வருகின்றது. இந்நிலையில் போரின் பின்னர் மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தமக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயத்தை மேற்கொள்ள முயற்சித்தபோதும் இதற்கான அனுமதியைப் படையினர் தொடர்ந்தும் மறுத்து வருகின்றனர்.

2007 - 2012 வரையிலான காலகட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்கள் தொகை நாலில் ஒரு பங்கு குறைந்துவிட்டது. இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் முல்லைத்தீவு மாவட்டமே மிகக் குறைந்த மக்கள் (92, 228) வாழும் மாவட்டமாக மாறியுள்ளது! அடுத்த இடத்தில் மன்னார் மாவட்டம் (99,063) இருகிறது. இதே காலகட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் குடித்தொகை 734,474 இல் இருந்து 583, 017 ஆகக் (20 விழுக்காடு) குறைந்துள்ளது.

இலங்கையிலே குடித்தொகை அடர்த்தி மிகக் குறைந்த 5 மாவட்டங்களில் 4 மாவட்டங்கள் வடக்கிலேயே உள்ளன. யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகியனவையே அவை ஆகும். 2001 குடித்தொகை மதிப்பீட்டின்படி இலங்கையின் சராசரி குடித்தொகை அடர்த்தி ஒரு ச.கிமீ 300 பேர். குடித்தொகை அடர்த்தி மிகக் குறைந்த மன்னாரில் ஒரு ச.கிமீ இல் 50 பேர் வாழ்கின்றனர். கொழும்பில் ச.கிமீ க்கு 3,300 பேரும் யாழ்ப்பாணத்தில் ச.கிமீ க்கு 530 பேரும் வாழ்கின்றனர்.

2009 குடித்தொகை மதிப்பீட்டின்படி வடக்கு- கிழக்கு இலங்கையின் நிலப்பரப்பில் 29 விழுக்காடு (18,880 ச.கிமீ) ஆகும். இங்கு மொத்த குடித்தொகையில் 13 விழுக்காடு (27,26,000 பேர்) தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் வாழ்கின்றனர். வடக்கை மட்டும் எடுத்துக்கொண்டால் 13 விழுக்காடு (8,880 ச.கிமீ) நிலப்பரப்பில் 6 விழுக்காடு மக்கள் (11,87,000 பேர்) வாழ்கின்றனர்.

திருகோணமலை மாவட்டம் சம்பூர் கிராமம் சிங்களப் படையினால் 2007 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டது. அன்றுதொட்டு இன்றுவரை அந்தக் கிராமத்தில் வாழையடி வாழையாக வாழ்ந்த மக்கள் தெருவோரம் குடிசைகள் அமைத்து வாழ்கிறார்கள். சம்பூர் கிராமத்தில் 10,000 ஏக்கர் நிலம் உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவம் அறிவித்துள்ளது. அந்த மக்களை (7,000 பேர்) அவர்களது சொந்த வீடு வாசல்களில் மீள்குடியமர்த்த மகிந்த இராசபக்சே பிடிவாதமாக மறுத்துவருகிறார்.

பக்கத்தில் வாகரையில் உள்ள பட்டிப்பளை பிரிவில் 107 சிங்களக் குடும்பங்களை அரசு குடியேற்றியுள்ளது. இதனால் மீன்பிடித் தொழில் செய்து வந்த தமிழ்க் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தென்தமிழீழத்தில் சிங்கள அரசும் மகிந்த இராசபக்சே குடும்பமும் நில அபகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. திருகோணமலையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சீனன்குடா விமான நிலையம் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் எல்லைப் பகுதியான வாகரையில் விமான நிலையமொன்றை அமைப்பதற்காக சிறீலங்கா விமானப்படை காணிகளை அபகரித்துள்ளது.

சுமார் 21 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இதற்காக கையகப்படுத்தப்பட்டு அப்பிரதேசத்தை சுற்றி முட்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. வடக்குக் கிழக்கின் தொடர்பிற்கான உயிர்ப்பாதையெனக் கருதப்படும் வாகரையில் இவ் விமான நிலையத்தை அமைப்பதன் மூலம் அது தொடர்பிலான சிங்கள குடியேற்றங்களை அப்பகுதியில் மேலும் அமைக்கும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்.

அறுகம்குடா, பாசிக்குடா, தென்னையடிக் குடா ஆகிய பிரதேசங்களை உல்லாசபுரிகளாக்கும் முயற்சியில் அதற்கான போக்குவரத்து மற்றும் வணிகத் தொடர்புகளை அதிகரிக்கவே இந்த முயற்சி செய்யப்படுகிறது.

பாசிக்குடாவில் தற்போது இயங்கிவரும் நாமல் இராசபக்சேயின் மூன்று நட்சத்திர உல்லாச விடுதி மேம்படுத்தப்படும் அதேவேளை, பசில் இராசபக்சேயின் உல்லாச விடுதியொன்றும் துரிதகதியில் இப் பகுதியில் கட்டப்பட்டு வருகிறது.

இந்த உல்லாசப் பயணத்துறை வணிகத்தில் இராசபக்சேயின் குடும்பத்தினரும் அவர்களின் நெருங்கிய உறவினர்களும் ஈடுபடுவதாலேயே அரச இயந்திரம் அசுர வேகத்தில் இயங்குகிறது!

வெளிநாட்டவர்களைக் கவரும் வகையில் பல மாடிகளைக் கொண்ட இந்த உல்லாச விடுதிகளில் தென்னை ஓலைகளால் வேயப்பட்ட குடிசைகள் பலவும் அமைக்கப்பட்டு வருகின்றது. இப்போதே இப்பகுதிகள் சிங்களப் பயணிகளால் நிரம்பி வழிவது இங்கு குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் அமையவிருக்கும் உல்லாசக் கடற்கரைக்கான தொடக்க வேலைகளைத் தொடங்கியுள்ள சிங்கள அரசு அதனை அண்டிய சுமார் மூன்று ச. கிமீ பரப்பளவிலான காணிகளை இராசபக்சே குடும்பத்துக்கு நெருக்கமான சிங்களவர்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு விற்று வருகிறது.

உல்லாச விடுதிகள் கட்டுவோருக்கு 20 ஏக்கர் நிலப்பரப்பும் கடைகள் மற்றும் இதர வணிகங்களை அமைப்பவர்களுக்கு 1 முதல் 5 ஏக்கர் காணியும் வழங்கப்பட்டு வருகின்றன. குச்சவெளியில் 40 உல்லாசவிடுதிகள் கட்டியவர்களுக்கும் இதே சலுகைகள் வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு உல்லாச நகருக்கு வெளிநாட்டு சுற்றுலாவிகள் தங்களின் படகுகளில் சென்று பார்த்துத் திரும்பும் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேபோன்ற திட்டத்தை கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் எல்லைப் பகுதியான சாட்டியிலும் உல்லாசப் படகுகளின் துறையாக கிளிநொச்சி மன்னார் தொடுவாய்களிற்கு இடைப்பட்ட பூநகரி - கவுதாரிமுனையை அண்டிய கடற்பகுதியில் உருவாக்கும் முயற்சியும் இடம்பெறுகிறது.

கிழக்கு மாகாணத்தில் துரித மகாவலி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 159,000 ஏக்கர் அல்லது 44,312 காணித் துண்டுகள் அதன் கீழ் வருகிறது. கெட ஓயா திட்டத்தின் கீழ் மேலும் 100,000 சிங்களவர்கள் குடியமர்த்தப்பட இருக்கிறார்கள். இது நிறைவேறும் போது கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களது விழுக்காடு 55 ஆக அதிகரிக்கும். துரிதமகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாகவே வட - கிழக்கின் நீர் நிலவளங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒலுவில் மற்றும் தீகவாபியை மையப்படுத்தி நான்கு புதிய சிங்களப் பிரிவுகளை அம்பாறையில் உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது.

அம்பாறை மாவட்டத்தில் தொல்லியல் ஆணையாளர் 43 பவுத்த மத இடங்களை இனம் கண்டுள்ளார். 1940 ஆம் ஆண்டளவில் தீகவாபி சைத்தியம் (பவுத்த கோயில்) இருந்த இடத்திற்கு ஒரு பவுத்த தேரர் வந்து சேர்ந்தார். அவருக்குத் தானம் கொடுக்க பவுத்தர்கள் இல்லாததால் முஸ்லிம்கள் தானம் கொடுத்தார்கள். சைத்தியத்தைச் சுற்றித் தேரர் தென்னங்கன்றுகளை நட்டு வளர்த்தார். சடுதியாக 1960 இல் இந்த சைத்தியத்தைச் சுற்றியுள்ள 500 ஏக்கர் காணியை சிஙகள அரசு கையேற்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

1968 இல் சிங்கள அரசு அன்றைய நிலவளவு ஆணையர் இரணதுங்க தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு 500 ஏக்கர் காணியை அரசு கையேற்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. அதற்கு மேல் நிலம் கையேற்கப்படமாட்டாது என்ற உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆனால் பவுத்த சிங்களவர்கள் மேலும் 1,000 ஏக்கர் நெற்செய்கைக் காணி வேண்டும் என்று அடம்பிடித்ததை அடுத்து சிங்கள அரசு முஸ்லிம்களுக்குச் சொந்தமான நெற்காணியை எந்த அறிவித்தலுமின்றிக் கைப்பற்றியுள்ளது. ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டிய கதையாக பவுத்த தேரரின் வருகை மாறியது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் மொத்த எண்ணிக்கை 65 விழுக்காடாகும். இருந்தும் நிருவாகம் சிங்களத்தில் மட்டும் நடைபெறுகிறது. 2006 ஆம் ஆண்டு வட - கிழக்கு பிரிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணத்தின் நிருவாகம் சிங்களவர்கள் சார்பாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஓய்வு பெற்ற கடற்படைத் தளபதி மோகன் விஜயவிக்கிரம, ஆளுநரின் செயலாளர் கப்டின் பற்றிக் ஜெயசிங்கி, அம்பாறை அரசாங்க அதிபர் சுனில் கனங்காரா, கிழக்கு மாகாண சபைச் செயலாளர், மாகாண சபை பொதுச் சேவை செயலாளர் எல்லோரும் சிங்களவர் ஆவர். இவர்கள் எல்லோரும் படைத்துறையில் இருந்து ஓய்வு பெற்ற தளபதிகளாவர். இவர்கள் சிங்கள மயப்படுத்தல் நடவடிக்கைக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. (http://www.sangam.org/2008/01/Sinhalisation.php?uid=2700)

கிழக்கு மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பு 9,996 ச.கிமீ (3,860 ச.மைல்) ஆகும். அம்பாறை மாவட்டம் உருவாக்கப்படு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பரப்பளவு 7,269 ச.கிமீ (2,807 ச.மைல்) ஆகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அம்பாறை பிரிக்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பரப்பளவு 2,854 ச.கிமீ (1,102 ச.மைல்) ஆகவும் அம்பாறை மாவட்டப் பரப்பளவு 4,415 ச.கிமீ (1,705 ச.மைல்) பரப்பளவாகவும் காணப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தின் நிலப்பரப்பு 2,727 ச.கிமீ (1,053 ச.மைல்) ஆகும். 1921 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குடித்தொகை மதிப்பின் படி திருகோணமலையில் சிங்களவர் தொகை 3 விழுக்காடாகவும் மட்டக்களப்பில் சிங்களவர் தொகை 4.5 விழுக்காடாகவும் காணப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களது தொகை 4 விழுக்காடாக இருந்தது.

1981 ஆம் ஆண்டு குடிமதிப்பின் அடிப்படையில் அம்பாறையில் சிங்களவரது விழுக்காடு 37.78 ஆக இருந்த போது அவர்களுக்கு 660 ச.மைல் நிலப்பரப்புத்தான் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் அவர்களுக்கு 1,340 ச.மைல் (76 விழுக்காடு) ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 41.54 விழுக்காடு முஸ்லிம்களுக்கு வெறுமனே 264 ச.மைல் (14 விழுக்காடு) நிலப்பரப்பும் 20.37 விழுக்காடு தமிழர்களுக்கு எஞ்சிய 172 ச.மைல் (10 விழுக்காடு) நிலப்பரபும் ஒதுக்கப்பட்டுள்ளது. வேறு விதத்தில் சொல்வதென்றால் சிங்களவர்களுக்கு மேலதிகமாக 680 ச.மைல் நிலப்பரப்பும் முஸ்லிம்களுக்கு 464 ச.மைல் குறைவாகவும் தமிழர்களுக்கு 216 ச.மைல் குறைவாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை தேர்தல் தொகுதி உருவாகிய காலம் (1960) தொட்டு ஒரு சிங்களவர் அந்த தொகுதியை பிரதிநித்துவப்படுத்தி வருகிறார். விகிதாசார தேர்தல் முறை 1978 இல் அறிமுகமான போது அப்போதிருந்த 160 தொகுதிகளுக்குப் பதில் 22 மாவட்ட தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. 1989 இல் விகிதாசார தேர்தல் முதல் முறை அறிமுகப்படுத்தப் பெற்றது. அந்தத் தேர்தலில் அம்பாறைக்கு ஒதுக்கப்பட்ட மொத்தம் 6 இருக்கையில் 4 சிங்களவர்கள், 1 முஸ்லிம் 1 தமிழர் தெரிவு செய்யப்பட்டனர். 1994 இல் நடந்த தேர்தலில் 4 சிங்களவர், 2 முஸ்லிம் தெரிவு செய்யப்பட்டனர். தமிழர் தெரிவு செய்யப்படவில்லை. 2000 இல் நடந்த தேர்தலில் 3 சிங்களவர், 3 முஸ்லிம் 1 தமிழர் தெரிவு செய்யப்பட்டனர். 2001 இல் நடந்த தேர்தலில் 2 சிங்களவர், 4 முஸ்லிம்கள் 1 தமிழர் தெரிவுசெய்யப்பட்டனர். மீண்டும் 2004 இல் நடந்த தேர்தலில் 2001 இல் நடந்த தேர்தலில் அதே எண்ணிக்கையில் தெரிவு செய்யப்பட்டனர். 2010 இல் நடந்த தேர்தலில் 3 சிங்களவர், 3 முஸ்லிம், 1 தமிழர் தெரிவு செய்யப்பட்டனர். அட்டவணை 1 ஒரே பார்வையில் அம்பாறைத் தொகுதியில் இனவாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் காட்டுகின்றது.

அட்டவணை 1

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் காரணமாக தமிழர் நிலத்தை மட்டுமல்ல நாடாளுமன்ற பிரதிநித்துவத்தையும் படிப்படியாக இழந்து வருகின்றனர்.

தமிழினம் சிங்கள - பவுத்தர்களது இனச் சுத்திகரிப்புக்கு உள்ளாகி வருகிறது. ஒரு இனம் தனது மொழியை இழந்தால் அதனை மீளப்பெறலாம். யூதர்கள் இஸ்ரேல் நாட்டில் இருந்து துரத்தப்பட்டதன் காரணமாக அவர்களது தாய்மொழியான ஹீபுரு மொழியைப் பேச மறந்து போனார்கள். அதற்குப் பதில் ஹீப்ரூ, அராமிக், ஜெர்மன், ஸ்லோவாக்கிய போன்ற மொழிகளின் கலப்பு மொழியான யிடிஷ் (Yiddish) மொழியைப் பேசினர். சிலர் எந்த நாட்டில் குடிபுகுந்தார்களோ அந்த நாட்டு மொழியைப் பேசினர். இஸ்ரேல் உருவாகிய சொற்ப காலத்தில் ஹீப்புரூ மொழி உத்தியோக மொழியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிலம் அப்படியல்ல. நிலத்தை இழந்தால் அதனைத் திரும்பப் பெறுவது கடினம். ஓயாது, ஓழியாது போராடித்தான் பெற வேண்டும். ஒவ்வொரு தமிழனும் இந்த உண்மையை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

(வளரும்)

நக்கீரன்

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
நாங்கள் நடக்கிற பாதை தந்தை செல்வாவின் பாதை என்று சொல்லிலும் செய்கையிலும் காட்டினால் சர்வதேசம் நாங்கள் சொல்லுவதை நம்பும்!
[Wednesday, 2013-05-15 20:46:54]

தமிழரசுக்கட்சியின் தொடக்கநரும் தமிழ்மக்களின் தந்தை எனவும் வாஞ்சையோடு போற்றப்படும் தந்தை செல்வாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் விழா தமிழரசுக் கட்சியால் அனுட்டிக்கப்பட்டது. வந்தாறுமூலை சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நடந்த இந்த விழாவுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம் தலைமை வகித்தார்.

முள்ளிவாய்க்கால் ஒரு தொடர்கதை
[Sunday, 2013-05-12 18:31:15]

முள்ளிவாய்க்கால் அது தமிழினத்தால் மறக்க முடியாத துயரங்களும் துன்பங்களும் நிகழ்ந்தேறிய நாள்.அது உரிமைக்காக போராட ஆயுதம் ஏந்தியவர்களின் உடைகள் உருவப்பட்ட நாள்.கழுத்தில் நகைகள் மட்டும் மல்ல நாங்கள் குப்பிகளும் அணிவோம் என இந்த உலகுக்கு எடுத்து காட்டிய வீரத்தமிழிச்சிகளின் உடல்கள் சிதைக்கப்ட்டநாள்.பிள்ளை தந்தையை இழந்த நாள்,தாய் பிள்ளையை இழந்த நாள்,மனைவி கணவனை இழந்த நாள்.மொத்தமாக தமிழன் தன் மண்ணை முற்றாக இழந்த நாள்.

தேர்தல்களில் விற்று வாங்க தேசியம் நுகர்வுப் பொருளல்ல - பனங்காட்டன்
[Saturday, 2013-05-11 11:28:07]

தேர்தல்கள் வரும், போகும். தேர்தல்களில் விற்கவும் வாங்கவும் தமிழ் தேசியம் ஒரு நுகர்வுப்பொருள் அல்ல என்பதை கூட்டமைப்பின் தலைமை புரிந்து நிதானமாக செயற்பட வேண்டும். சர்வதேச அரங்கில் இப்பொழுது அதிகளவில் பேசப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம், தமிழினப் படுகொலை, பொறுப்புக் கூறுல் மறுப்பு என்று இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.

தமிழ்நாட்டில் வேலைக்காரியோடு பேசுமொழி எந்த மொழி? - நக்கீரன்
[Monday, 2013-05-06 21:30:34]

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட நாள்களாக பட்டிமன்றத்துக்கு உரிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
இதற்குக் காரணம் இருக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் கூலித் தொழிலாளர்களாக வேற்று நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் தங்களது தாய்மொழியான தமிழை இழந்து தங்கள் அடையாளத்தைத் தொலைத்து விட்டார்கள். அவர்களது பெயர்கள் கூட சிதைந்துவிட்டன. இந்த நிலைமை பியூஜி, மொறேஷியஸ், தென் ஆபிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், மடகஸ்கார், றீயூனியன் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. பியூஜி தீவில் வாழும் தமிழர்கள் தாய்மொழி தமிழுக்குப் பதில் இந்தி படிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள். இந்த முயற்சியில் இந்திய நடுவண் அரசு மும்மரமாக ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? - இதயச்சந்திரன்
[Sunday, 2013-05-05 21:07:06]

ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் , 80 களின் முற்பகுதியைவிட அக்டோபர் 1997 இலிருந்து பார்ப்பது பொருத்தமாகவிருக்கும். 97 இல், வெளிநாட்டு பயங்கவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடை செய்த ஒருதுருவ நாயகன் அமெரிக்கா ( உலக நாயகன் என்று இப்போது சொல்ல முடியாது), 2001 நவம்பரில் பூகோளப் பயங்கரவாதிகள் என்கிற பெயரை அவர்களுக்குச் சூட்டியது. அது மட்டுமல்லாது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் வெண்புறா போன்ற தொண்டர் நிறுவனங்களைத் தடை செய்தது. அன்றைய அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரிச்சார்ட் ஆமிரெஜ் தொடக்கம் இன்றைய மேற்குலக இராஜதந்திர கருத்துருவாக்கிகளின் மையமான அனைத்துலக நெருக்கடிக்குழு வரை, 'ஆயுதப்போராட்டத்தைக் கைவிடுங்கள்',' வெளியக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை மறந்திடுங்கள் 'என்றுதான் விடுதலைப்புலிகளின் காதுகளில் ஓதிக்கொண்டிருந்தார்கள்.

பூநகரான் பார்வையில் - தமிழரின் நம்பிக்கை நட்சத்திரம் ராதிகா சிற்சபைஈசனுடன் ஒரு உரையாடல்:
[Saturday, 2013-05-04 07:31:23]

"ராதிகா" - கனடாப் புலம் பெயர் தமிழரின் சமகால நம்பிக்கை நம்பிக்கை நட்சத்திரம் அரசியல் அங்கீகாரம். குறிப்பாக தலைவர் பிரபாகரனின் வன்னி யுகத்தின் முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பின், மேற்குலகில் மின்னும் ஜனநாயக விடிவெள்ளி ராதிகா. புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திலிருந்து வெளிநாடொன்றின் , தேசியப் பாராளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது ஈழத் தமிழ் நங்கை நம் தங்கை ராதிகா.

கூட்டைக் கலைப்பது சுலபம் அதனைக் கட்டுவது சிரமம் - பனங்காட்டன்
[Friday, 2013-05-03 22:33:31]

கூட்டைக் கட்டியவர்களுக்குத்தான் அதன் அருமை பெருமை தெரியும். அவர்களுக்குத்தான் அதன் அத்தியவசியமும் புரியும். அதன் ஆழமும் அகலமும் அறியாமல் வெறும் பதவிகளுக்காக அதற்குள் குடியேறியவர்களுக்கு அது வெறும் கூடாகத் தெரிவதால்தான் இன்னொரு கூட்டைக் கட்டலாமென நினைக்கிறார்கள் போலும்.

வடக்கில் தீவிரமடையும் நில அபகரிப்பு! - இதயச்சந்திரன்
[Tuesday, 2013-04-30 23:28:47]

மே 2009 இற்குப் பின்னர் வட -கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஏறத்தாள 2500 சைவக் கோவில்களும் 400 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்ட அதேவேளை ,அவற்றை மறுபடியும் நிர்மாணிப்பதற்கு படைத்தரப்பு அனுமதியளிக்க மறுப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனாலும் வடக்கில் வீசும் வசந்தம் ,புத்தர் சிலைகளையும், பௌத்த கோபுரங்களையும் அரசின் அனுமதியோடு அழைத்து வருகிறது. கனகராயன் குளத்தில் பௌத்த தூபிகளும், கிளிநொச்சியில் தியானத்தில் ஆழ்ந்துள்ள பிரமாண்டமான புத்தர் சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் மகாதோட்ட ரஜ மகா விகாரையும் தோன்றியுள்ளன. மூதூரில் காளிக்கும் இடமில்லை. கோணேசர் கோட்டை வாசலில் காவலுக்கு இருந்த பிள்ளையாரை கடலில் வீசிய பழைய நினைவுகள்தான் மீண்டெழுந்து வருகின்றது.

எல்லைகளும் சுதந்திமும் கொசோவோ மற்றும் தென் சூடான் இரண்டினதும் பட்டறிவு: - எச். காஸ்நோபிஸ்
[Saturday, 2013-04-27 22:01:41]

(கொசோவோ மற்றும் தென் சூடான் இரண்டினது சுதந்திரம் குடியேற்ற நாடுகள் வரைந்த எல்லைக் கோடுகள் புதினதத்தன்மை வாய்ந்தவை அல்லவென்பதைக் காட்டுகின்றது. இது தமிழீழத்துக்கும் பொருந்தும். சிங்களத்துக்கும் தமிழீழகத்துக்கும் இடையில் இருந்த எல்லைக்கோடுகளைப் பிரித்தானிய ஒருதலைப் பட்சமாக அழித்ததே இன்றைய இனச் சிக்கலுக்கும் அமைதியின்மைக்கும் காரணியாகும். கொசோவோ மற்றும் தென் சூடானில் நடைபெற்றது போல் தமிழ்மக்களுக்கும் சுயநிருணய அடிப்படையின் கீழ் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த அய்யன்னா முன்வர வேண்டும்)

நிலத்தைப் பறிகொடுத்த பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வு யாருக்கு? - பனங்காட்டன்
[Friday, 2013-04-26 22:40:06]

ஒரு வேலிக்காகவும் ஓர் அங்குல காணிக்காவும் எத்தனை குடும்பச் சண்டைகளும் எத்தனை கொலைகளும் நடைபெற்றன என்பதை ஒரு தடவை எண்ணிப் பார்க்கையில், இப்போது ஒட்டுமொத்த அடிப்படையில் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் பறிபோகும்போது சமூகம் ஒட்டுமொத்தமாக என்ன செய்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.

Ramans2011
INNSYS-20120930
TDE_Computers2011
Canada Kanthasamy Kovil
RoyaShades-l2011(04-12-11)
NIRO-DANCE-100213
Mahesan supramaniyam 031109
Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com