Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 18, 2013 [GMT]

  • Welcome
  • Welcome
ஒரு விருதுக்குப் பின்னாலான இருபத்திமூன்று வருட வரலாறு: - அ.முத்துலிங்கம் Top News
[Wednesday, 2012-07-04 12:23:49]

1989ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி காலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இந்தக் கதை ஆரம்பிக்கிறது. அன்று புதன் கிழமை. நாலு இளைஞர்கள் ஒரு நீல நிற ஃபோர்ட் காரில் வந்து வீட்டுக் கதவை தட்டினார்கள். அந்த இளைஞர்களில் ஒருவரின் கையில் துப்பாக்கி இருந்ததை கவனித்த வீட்டுக்காரர் 'கடைசியில் வீட்டுக்கே வந்துவிட்டார்கள்' என்று நினைத்தார்.


  

துவக்குடன் ஒருவரும் விவாதம் செய்யமுடியாது என்பது அவருக்கு தெரியும். அவர் பின் கதவு வழியாகப் பாய்ந்து வேறு வீட்டுக்குள் புகுந்து ஒளிந்துகொண்டார். அவருடைய மகன் அகிலன் நடப்பது தெரியாமல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அவர் 19வது பிறந்த நாளைக் கொண்டாடி 5 நாட்கள் கடந்திருந்தன. அடுத்தநாள் நடக்கப் போகும் வேதியியல் பரீட்சைக்காக படித்துவிட்டு அதிகாலை இரண்டு மணிக்குத்தான் தூங்கப் போயிருக்கிறார். சத்தம் கேட்டு வெளியே வந்து இளைஞர்களிடம் என்னவென்று கேட்டபோது அவர்கள் அவரை பலவந்தமாக தூக்கி காருக்குள் திணித்துக்கொண்டு புறப்பட்டார்கள். சில நிமிடங்களில் தலையில் குண்டு துளைத்த அகிலனின் சடலம் வீதியிலே வீசப்பட்டுக் கிடந்தது.

துப்பாக்கி ஒருநாள் தன்னை தேடிவரும் என்பது அகிலனின் அப்பா திருச்செல்வத்துக்கு தெரியும். அந்தக் காலங்களில் யாழ்ப்பாணம் இந்திய அமைதிப் படையின் ஆட்சியின் கீழ் இயங்கியது. யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பிரபல தினப்பத்திரிகையான முரசொலியின் பிரதம ஆசிரியர் திருச்செல்வம். அவரைக் கொல்வதற்கு ஏற்கனவே பல முயற்சிகள் நடந்திருந்தன. இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் பத்திரிகை அலுவலகம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. அவர் உயிர் தப்பினார். 82 நாட்கள் அவரை சிறையில் அடைத்து சித்திரவதை செய்தார்கள். அவர் திருந்துவதாயில்லை. கடைசி முயற்சியாக மகனின் கொலை நடந்து முடிந்திருந்தது.

திருச்செல்வம் செய்த குற்றம் என்னவென்றால் நேர்மையான ஒரு பத்திரிகை நடத்தியது; சுதந்திரமான கருத்துக்களை எழுதி வெளியிட்டது. செய்திகளை வெளியிட முன்னர் ராணுவத்திடம் அனுமதி பெறவேண்டும் என்பது கட்டளை. மரண அறிவித்தல் செய்தி அல்ல ஆகவே அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை என்பது பிரதம ஆசிரியரின் வாதம். மரண அறிவித்தல்கள் பத்திரிகையில் அன்றாடம் வெளியாகும்போது ராணுவத்தின் அன்றைய கொலைகளும் வெளிச்சத்துக்கு வந்தன. அதிகாரத்துக்கு அது பிடிக்கவில்லை.

அன்று தொடங்கியது திருச்செல்வத்தின் ஓட்டம். அருமையான ஒரே மகனை இழந்துவிட்டு கணவனும் மனைவியும் நண்பர்கள் வீட்டிலும் உறவினர் வீட்டிலும் நாளுக்கு ஓர் இடமாக ஒரு மாதம் தலைமறைவாக வாழ்ந்தனர். அவரை ஒழித்தால்தான் அவருடைய பத்திரிகையை ஒழிக்கலாம். ஒவ்வொரு நாள் வாழ்வதும் ஒரு சாதனையாக மாறிவிட்ட சமயம் எதிர்பாராத இடத்தில் இருந்து ஓர் உதவி வந்தது. ஆன் ரணசிங்க என்ற யூதப் பெண்மணி இவரை எப்படியோ தேடித் தொடர்புகொண்டார்.

லண்டன் சர்வதேச மன்னிப்புச் சபை அங்கத்தவரான அவரும் தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்ந்தார். அவர் சொன்னார் 'நீங்கள் முக்கியமான பத்திரிகை ஆசிரியர். உங்கள் உயிர் எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம். நாங்கள் கனடிய PEN அமைப்புடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்கள் உங்களை கனடாவுக்கு எடுப்பித்து விடுவதாகச் சொல்கிறார்கள். தயாராக இருங்கள்.'

கனடாவின் PEN அமைப்பு பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான June Callwood (ஜூன் கால்வுட்) மற்றும் மார்கிரட் அட்வூட் போன்ற பிரபலர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 144 நாடுகளில் கிளைகள் பரப்பியது. சர்வதேச எழுத்தாளர்கள் ஆயிரத்துக்கும் மேலே அங்கத்தவர்களாக இருக்கிறார்கள். அமைப்பின் மேலான நோக்கம் உலகத்து பத்திரிகை சுதந்திரத்துக்காக குரல்கொடுப்பது. எழுத்தாளர் மற்றும் பத்திரிகாசிரியர்களுடைய பாதுகாப்புக்காக போராடுவது.

திருச்செல்வத்துக்கும் மனைவிக்கும் கடவுச் சீட்டு கிடையாது. புதிதாக ஒன்று எடுக்கவும் முடியாது. கனடிய அரசு அவர்களுக்கு தற்காலிகமான கனடிய கடவுச்சீட்டுகள் வழங்கி அவர்களை கனடாவுக்கு வரவழைத்தது. அவர்கள் கனடா வந்து இறங்கியதும் அந்த நிகழ்ச்சி அங்கே ஏற்கனவே பிரபலமாகிவிட்டது. கனடாவின் மூத்த பத்திரிகையான ரொறன்ரோ ஸ்டார் அவர்களுடைய நேர்காணலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பத்திரிகையில் பிரசுரித்தது.

ஒரு பிரபல அமெரிக்க எழுத்தாளர் சிறுகதை ஒன்று எழுதினார். அதிலே 19 வயது மகனை சிறையிலே பிடித்து அடைத்துவிட்டார்கள். அவனுடைய 50 வயது தகப்பன் எப்பொழுதும் மகிழ்ச்சியாக ஒழுங்கற்ற விதமான வீரதீரச் செயல்கள் நிறைந்த வாழ்கையை வாழ்ந்தார். 'ஏன் அப்படி வாழ்கிறார்?' என்று கேட்டபோது 'நான் என் வாழ்க்கையை வாழவில்லை. சிறையில் வாடும் என் மகனுக்காக அவன் வாழ்க்கையை வாழ்கிறேன்' என்றார். அதே மாதிரித்தான் திருச்செல்வம் தம்பதிகளும் ஒரு முடிவு எடுத்தனர். திருச்செல்வம் தனக்காக உயிரைக் கொடுத்த தன் மகனை நினைத்தார். இனிமேல் எஞ்சிய தன் வாழ்கையை அகிலனுக்காக வாழ்வது என்று தீர்மானித்து அன்றிலிருந்து பொதுவாழ்வில் தங்களை முற்றிலுமாக இருவரும் இணைத்துக் கொண்டார்கள்.

முதல் வேலையாக 1991ல் 'தமிழர் தகவல்' என்ற மாதாந்திர இதழை அவருடைய மகன் அகிலனின் நினைவாக அவன் பிறந்த 5ம் தேதி வெளிவரும் விதமாக ஆரம்பித்தார் திருச்செல்வம். கனடாவுக்கு வந்து குடியேறும் அகதிகள் மற்றும் குடியுரிமை பெறாதவர்கள் ஆகியோருக்கு உபயோகமான குடிவரவு சட்டதிட்டங்கள் கனடா வாழ்வு முறைக்கான ஆலோசனைகள் சுகாதாரக் குறிப்புகள் வீட்டு பராமரிப்பு முறைகள் பாடசாலை விவரங்கள் போன்ற சகலவிதமான பயனுள்ள தகவல்களும் அடங்கிய இதழ் 'தமிழர் தகவல்'. அதை லட்சக்கணக்கான மக்கள் கடந்த 20 வருடங்களாக படித்து பயன் பெற்றனர்.

இவருடைய சேவை இத்துடன் நிற்கவில்லை. குடிவரவு சம்பந்தப்பட்ட எல்லா விசயங்களுக்கும் மக்களின் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். பல்வேறு விதமான தொண்டு நிறுவனங்களில் இணைந்து சேவை புரிந்தார். அகதிகள் சம்பந்தமாக இலவச ஆலோசனைகள் வழங்குவதுடன் அகதிகள் தொடர்பான பிரச்சினைகளில் அரசாங்கத்தோடு தொடர்புகொண்டு சுமுகமான தீர்வுகளுக்கு வழிவகுத்தார்.

இது தவிர ஒம்னி தொலைக்காட்சி ரொறன்றோ பொலீஸ் சேவை ஒன்ராறியோ அகதிகள் அலுவல் வலையமைப்பு ஆகியவற்றின் ஆலோசகராகவும் பணியாற்றினார். இவருடைய பலதரப்பட்ட சேவைகளைப் பாராட்டி Canada Ethnic Media Award மற்றும் Newcomer Champion Award போன்ற விருதுகள் வழங்கப்பட்டன. இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல கடந்த மாதம் 20 ஏப்ரல் 2012 அன்று மாநில அரசின் மதிப்பு வாய்ந்த விருதான ஜூன் கால்வுட் (June Callwood) முதன்மை சாதனை விருது ஒன்ராறியோ குடிவரவு குடியுரிமை அமைச்சரால் திரு எஸ். திருச்செல்வம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. முதல் தடவையாக ஒரு ஆசியருக்கு அதுவும் தமிழருக்கு கிடைத்த விருது. இதிலே சிறப்பு என்னவென்றால் PEN கனடா அமைப்பாளர் ஜூன் கால்வுட் பெயரால் அந்த விருது வழங்கப்பட்டதுதான். 22 வருடங்களுக்கு முன்னர் இந்த அமைப்புத்தான் அவரை நாடுவிட்டு கடத்தி காப்பாற்றியது.

திரு திருச்செல்வம் இந்தப் பெரிய விருது கிடைத்த பின்னரும் அமைதியாக 'இது என் மகனுக்கு கிடைத்தது' என்கிறார். 'என் மகன் கிரிக்கெட் விளையாட்டில் அபூர்வமான திறமை கொண்டவன். வலதுகை பந்து வீச்சாளன். இடது கை துடுப்பாட்டக்காரன். இரண்டு கைகளின் முழுத்திறனையும் வெளிக்கொண்டு வரவேண்டும் என்று சொல்வான். அதுபோலத்தான் நானும். என் ஆத்மாவின் முழு ஆற்றலும் வெளிப்பட தொண்டு செய்யவேண்டும் என நினைக்கிறேன்.'

திரு திருச்செல்வமும் மனைவி ரஞ்சியும் மகனின் மீதி வாழ்க்கையை நிறைவாகவும் சிறப்பாகவும் வாழ் வாழ்த்துக்கள்.

(நன்றி- தினக்குரல்)

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
நாங்கள் நடக்கிற பாதை தந்தை செல்வாவின் பாதை என்று சொல்லிலும் செய்கையிலும் காட்டினால் சர்வதேசம் நாங்கள் சொல்லுவதை நம்பும்!
[Wednesday, 2013-05-15 20:46:54]

தமிழரசுக்கட்சியின் தொடக்கநரும் தமிழ்மக்களின் தந்தை எனவும் வாஞ்சையோடு போற்றப்படும் தந்தை செல்வாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் விழா தமிழரசுக் கட்சியால் அனுட்டிக்கப்பட்டது. வந்தாறுமூலை சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நடந்த இந்த விழாவுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம் தலைமை வகித்தார்.

முள்ளிவாய்க்கால் ஒரு தொடர்கதை
[Sunday, 2013-05-12 18:31:15]

முள்ளிவாய்க்கால் அது தமிழினத்தால் மறக்க முடியாத துயரங்களும் துன்பங்களும் நிகழ்ந்தேறிய நாள்.அது உரிமைக்காக போராட ஆயுதம் ஏந்தியவர்களின் உடைகள் உருவப்பட்ட நாள்.கழுத்தில் நகைகள் மட்டும் மல்ல நாங்கள் குப்பிகளும் அணிவோம் என இந்த உலகுக்கு எடுத்து காட்டிய வீரத்தமிழிச்சிகளின் உடல்கள் சிதைக்கப்ட்டநாள்.பிள்ளை தந்தையை இழந்த நாள்,தாய் பிள்ளையை இழந்த நாள்,மனைவி கணவனை இழந்த நாள்.மொத்தமாக தமிழன் தன் மண்ணை முற்றாக இழந்த நாள்.

தேர்தல்களில் விற்று வாங்க தேசியம் நுகர்வுப் பொருளல்ல - பனங்காட்டன்
[Saturday, 2013-05-11 11:28:07]

தேர்தல்கள் வரும், போகும். தேர்தல்களில் விற்கவும் வாங்கவும் தமிழ் தேசியம் ஒரு நுகர்வுப்பொருள் அல்ல என்பதை கூட்டமைப்பின் தலைமை புரிந்து நிதானமாக செயற்பட வேண்டும். சர்வதேச அரங்கில் இப்பொழுது அதிகளவில் பேசப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம், தமிழினப் படுகொலை, பொறுப்புக் கூறுல் மறுப்பு என்று இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.

தமிழ்நாட்டில் வேலைக்காரியோடு பேசுமொழி எந்த மொழி? - நக்கீரன்
[Monday, 2013-05-06 21:30:34]

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட நாள்களாக பட்டிமன்றத்துக்கு உரிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
இதற்குக் காரணம் இருக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் கூலித் தொழிலாளர்களாக வேற்று நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் தங்களது தாய்மொழியான தமிழை இழந்து தங்கள் அடையாளத்தைத் தொலைத்து விட்டார்கள். அவர்களது பெயர்கள் கூட சிதைந்துவிட்டன. இந்த நிலைமை பியூஜி, மொறேஷியஸ், தென் ஆபிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், மடகஸ்கார், றீயூனியன் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. பியூஜி தீவில் வாழும் தமிழர்கள் தாய்மொழி தமிழுக்குப் பதில் இந்தி படிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள். இந்த முயற்சியில் இந்திய நடுவண் அரசு மும்மரமாக ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? - இதயச்சந்திரன்
[Sunday, 2013-05-05 21:07:06]

ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் , 80 களின் முற்பகுதியைவிட அக்டோபர் 1997 இலிருந்து பார்ப்பது பொருத்தமாகவிருக்கும். 97 இல், வெளிநாட்டு பயங்கவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடை செய்த ஒருதுருவ நாயகன் அமெரிக்கா ( உலக நாயகன் என்று இப்போது சொல்ல முடியாது), 2001 நவம்பரில் பூகோளப் பயங்கரவாதிகள் என்கிற பெயரை அவர்களுக்குச் சூட்டியது. அது மட்டுமல்லாது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் வெண்புறா போன்ற தொண்டர் நிறுவனங்களைத் தடை செய்தது. அன்றைய அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரிச்சார்ட் ஆமிரெஜ் தொடக்கம் இன்றைய மேற்குலக இராஜதந்திர கருத்துருவாக்கிகளின் மையமான அனைத்துலக நெருக்கடிக்குழு வரை, 'ஆயுதப்போராட்டத்தைக் கைவிடுங்கள்',' வெளியக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை மறந்திடுங்கள் 'என்றுதான் விடுதலைப்புலிகளின் காதுகளில் ஓதிக்கொண்டிருந்தார்கள்.

பூநகரான் பார்வையில் - தமிழரின் நம்பிக்கை நட்சத்திரம் ராதிகா சிற்சபைஈசனுடன் ஒரு உரையாடல்:
[Saturday, 2013-05-04 07:31:23]

"ராதிகா" - கனடாப் புலம் பெயர் தமிழரின் சமகால நம்பிக்கை நம்பிக்கை நட்சத்திரம் அரசியல் அங்கீகாரம். குறிப்பாக தலைவர் பிரபாகரனின் வன்னி யுகத்தின் முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பின், மேற்குலகில் மின்னும் ஜனநாயக விடிவெள்ளி ராதிகா. புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திலிருந்து வெளிநாடொன்றின் , தேசியப் பாராளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது ஈழத் தமிழ் நங்கை நம் தங்கை ராதிகா.

கூட்டைக் கலைப்பது சுலபம் அதனைக் கட்டுவது சிரமம் - பனங்காட்டன்
[Friday, 2013-05-03 22:33:31]

கூட்டைக் கட்டியவர்களுக்குத்தான் அதன் அருமை பெருமை தெரியும். அவர்களுக்குத்தான் அதன் அத்தியவசியமும் புரியும். அதன் ஆழமும் அகலமும் அறியாமல் வெறும் பதவிகளுக்காக அதற்குள் குடியேறியவர்களுக்கு அது வெறும் கூடாகத் தெரிவதால்தான் இன்னொரு கூட்டைக் கட்டலாமென நினைக்கிறார்கள் போலும்.

வடக்கில் தீவிரமடையும் நில அபகரிப்பு! - இதயச்சந்திரன்
[Tuesday, 2013-04-30 23:28:47]

மே 2009 இற்குப் பின்னர் வட -கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஏறத்தாள 2500 சைவக் கோவில்களும் 400 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்ட அதேவேளை ,அவற்றை மறுபடியும் நிர்மாணிப்பதற்கு படைத்தரப்பு அனுமதியளிக்க மறுப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனாலும் வடக்கில் வீசும் வசந்தம் ,புத்தர் சிலைகளையும், பௌத்த கோபுரங்களையும் அரசின் அனுமதியோடு அழைத்து வருகிறது. கனகராயன் குளத்தில் பௌத்த தூபிகளும், கிளிநொச்சியில் தியானத்தில் ஆழ்ந்துள்ள பிரமாண்டமான புத்தர் சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் மகாதோட்ட ரஜ மகா விகாரையும் தோன்றியுள்ளன. மூதூரில் காளிக்கும் இடமில்லை. கோணேசர் கோட்டை வாசலில் காவலுக்கு இருந்த பிள்ளையாரை கடலில் வீசிய பழைய நினைவுகள்தான் மீண்டெழுந்து வருகின்றது.

எல்லைகளும் சுதந்திமும் கொசோவோ மற்றும் தென் சூடான் இரண்டினதும் பட்டறிவு: - எச். காஸ்நோபிஸ்
[Saturday, 2013-04-27 22:01:41]

(கொசோவோ மற்றும் தென் சூடான் இரண்டினது சுதந்திரம் குடியேற்ற நாடுகள் வரைந்த எல்லைக் கோடுகள் புதினதத்தன்மை வாய்ந்தவை அல்லவென்பதைக் காட்டுகின்றது. இது தமிழீழத்துக்கும் பொருந்தும். சிங்களத்துக்கும் தமிழீழகத்துக்கும் இடையில் இருந்த எல்லைக்கோடுகளைப் பிரித்தானிய ஒருதலைப் பட்சமாக அழித்ததே இன்றைய இனச் சிக்கலுக்கும் அமைதியின்மைக்கும் காரணியாகும். கொசோவோ மற்றும் தென் சூடானில் நடைபெற்றது போல் தமிழ்மக்களுக்கும் சுயநிருணய அடிப்படையின் கீழ் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த அய்யன்னா முன்வர வேண்டும்)

நிலத்தைப் பறிகொடுத்த பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வு யாருக்கு? - பனங்காட்டன்
[Friday, 2013-04-26 22:40:06]

ஒரு வேலிக்காகவும் ஓர் அங்குல காணிக்காவும் எத்தனை குடும்பச் சண்டைகளும் எத்தனை கொலைகளும் நடைபெற்றன என்பதை ஒரு தடவை எண்ணிப் பார்க்கையில், இப்போது ஒட்டுமொத்த அடிப்படையில் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் பறிபோகும்போது சமூகம் ஒட்டுமொத்தமாக என்ன செய்கின்றது என்ற கேள்வி எழுகின்றது.

Suresh-remax-2013-01-01
NIRO-DANCE-100213
RoyaShades-l2011(04-12-11)
INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
Canada Kanthasamy Kovil
Ramans2011
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com